No products in the cart.
ஏப்ரல் 18 – நிச்சயமாகவே!
“நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது” (நீதி. 23:18).
நிச்சயமாகவே முடிவு உண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார். முடிவு உண்டு என்று அவர் சாதாரணமாக சொல்லவில்லை. நிச்சயமாகவே என்கிற வார்த்தையையும் கூட இணைத்து சொல்லுகிறார். சாதாரணமாக முடிவு உண்டு என்று சொன்னாலும், அந்த வார்த்தை உறதியானதுதான். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தைகள் ஒழியாது. தமது வார்த்தையை இரண்டு மடங்கு உறுதிப்படுத்துவதற்காக ‘நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண்போகாது’ என்று சொல்லி கர்த்தர் உங்களை ஆற்றித் தேற்றுகிறார். இந்த இடத்தில் நிச்சயமாகவே முடிவு உண்டு என்ற வார்த்தையானது, நிச்சயமாகவே பலனுண்டு, நிச்சயமாகவே விடிவு காலம் உண்டு. உன் நம்பிக்கை நிறைவேறும் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆபிரகாம் தனக்கு ஒரு ஆசீர்வாதமான சந்ததியை கர்த்தர் தருவார் என்று உறுதியாய் விசுவாசித்தார். ஆனால் காலமோ கடந்து கொண்டிருந்தது. கர்த்தர் கொடுப்பாராமாட்டாரா என்பதைக் குறித்து ஆபிரகாம் சந்தேகப்படவில்லை. வேதம் சொல்லுகிறது, “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச், சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:20, 21).
கர்த்தர் அந்த விசுவாசத்தைக் கண்டார். ஆபிரகாமின் ஜெபத்திற்கும், காத்திருத்தலுக்கும் பலன் இருந்தது. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. தேவன், “உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக” (ஆதி. 17:19) என்று சொல்லி ஆசீர்வாதமான ஈசாக்கைக் கொடுத்தார். ஈசாக்கின் மூலமாக வானத்து நட்சத்திரங்களைப் போல சந்ததியை பெருகப்பண்ணினார்.
நிச்சயமாகவே உங்களுடைய சந்ததி, கர்த்தருடைய சந்ததி என்று அழைக்கப்படும். நீங்கள் தலைமுறை தலைமுறையாக தேவனைத் துதித்து வருவீர்கள். உன்னதமானவர் உங்கள் குடும்பத்தை வர்த்திக்கப்பண்ணுவார். ஏனென்றால் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் அல்லவா? (சங். 127:4).
நிச்சயமாகவே என்று கர்த்தர் சொல்லுகிற இன்னொரு வேத பகுதியை ஏசாயா 36:15-ல் வாசிக்கலாம். ‘கர்த்தர் நிச்சயமாகவே நம்மை தப்புவிப்பார்’ என்று அங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜாவாகிய எசேக்கியா கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்து, தங்களுக்கு விரோதமாய் படையெடுத்து வந்த அசீரியர்களைக் கண்டு இஸ்ரவேல் ஜனங்கள் பயப்பட்டு விடக்கூடாது என்று உணர்ந்து, அவர்களைத் திடப்படுத்துகிறதைப் பாருங்கள்.
அசீரியரின் வீரர்களோ ஏராளமாயிருந்தார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, ஒரு சிலராயிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களை வில்லும், ஈட்டியும், பட்டயமும் தப்புவிக்கவில்லை. நிச்சயமாகவே கர்த்தரே அவர்களை தப்புவித்தார். தேவபிள்ளைகளே, தீய மனுஷர் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறார்களா? கர்த்தர் உங்களைத் தப்புவிப்பார்.
நினைவிற்கு:- “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத். 7:11).