AppamAppam - Tamil

Mar 30 – மேகங்கள் மேல்!

“உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெச. 4:17).

அமெரிக்கா தேசத்தின் “கென்னடி விண்வெளி மையம்” என்ற ராக்கெட் தளத்திலிருந்து, ஜுலை மாதம் 21-ம் நாள் 1969-ம் வருஷம் மாபெரும் அப்பல்லோ 11 என்ற ராக்கெட் சந்திரனை நோக்கி எழும்பிச் சென்றது. அந்த ராக்கெட்டில் மூன்று பேர் விண்வெளிக்கு சென்றிருந்தார்கள். முதல் காலடி வைத்து இறங்கிய விண்வெளி வீரரான நெயில் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர், “நான் ஒரு சிறிய அடி எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் மனுக்குலத்தின் முன்னேற்றத்திற்கு அது ஒரு பெரிய சாதனை” என்றார்.

அதே நேரத்தில், நீங்களும் விண் உலகத்திற்கு பறந்து சந்திர மண்டலத்திற்கு மேலாய், சூரிய மண்டலத்திற்கு மேலாய் பறந்து போய் இயேசு கிறிஸ்துவை சந்திக்கப் போகிறீர்கள் என்பது மறுக்க முடியாத சத்தியமாகும். எந்த ராக்கெட்டில் ஏறிச் செல்லுவது, அப்படி ஏறிச் செல்லுவதற்கு பயணச் செலவு எவ்வளவு கொடுக்க வேண்டும், அந்த பயணம் எத்தனை நாள் நீடிக்கும் என்ற பல கேள்விகள் உங்களுடைய உள்ளத்தில் எழும்பக்கூடும்.

அந்தக் காரியங்களையெல்லாம் கர்த்தர் பொறுப்பெடுத்திருக்கிறார். எக்காள சத்தம் தொனிக்கும்போது உங்களுடைய சரீரமே ஒரு ராக்கெட்டைப் போலமாறிவிடும். வேதம் சொல்லுகிறது, “எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்” (1 கொரி. 15:52). “அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்” (1 கொரி. 15:54). இதைத்தான் அப்.பவுல் “நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள்மேல் எடுத்துக்கொள்ளப்படுவோம்” (1 தெச. 4:17) என்று குறிப்பிடுகிறார்

கர்த்தருடைய வருகையிலே எடுத்துக் கொள்ளப்படுவதற்கு பரிசுத்த ஜீவியமும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும் மிகமிக தேவை. மண்ணான இந்த சரீரத்தை மறுரூபமாக்கி பறந்து செல்ல வழி செய்கிறவர் ஆவியானவர்தான். அப். பவுல் சொல்லுகிறார், “இயேசுவை மரித்தோரிலிருந்து ஏழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோமர் 8:11).

ராக்கெட்டிலுள்ள பெரிய இஞ்சின்போல உங்களுக்குள்ளே ஆவியானவரின் பரலோக இஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. கர்த்தர்தாமே பூமிக்குரிய பாரங்களை நீக்கி, உன்னதங்களுக்கு அழைத்துச் செல்லுகிறவர். மரித்தோரிலிருந்து எழுந்தருளின இயேசு கிறிஸ்து, ஒரு ராக்கெட் செல்லுவதைப்போல ஒலிவ மலைச் சாரலில் இருந்து மேகங்கள் மேல் பரலோகத்திற்கு பரிசுத்த ஆவியினாலே எடுத்துக் கொள்ளப்பட்டார். அவர் சந்திர மண்டலத்திற்கு மேலாய் சூரிய மண்டலத்திற்கு மேலாய்ச் சென்று, முடிவிலே பிதாவின் வலது பாரிசத்திலே போய் அமர்ந்தார். இந்த இயேசு மீண்டும் வருவார். நீங்கள் அவரோடு என்றென்றும் வாழுவீர்கள்.

நினைவிற்கு:- “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்” (யோவான் 12:32).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.