AppamAppam - Tamil

Mar 21 – முள்ளுகளால் ஒரு முடி!

“முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து…” (மத். 27:29).

இயேசுவின் சிரசில் முள்முடி சூட்டப்பட்டு, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களுக்கு முள்முடி சூட்டப்படவில்லை. அதற்கு முன்பாகவும், பின்பாகவும்  ரோமர்கள், பலரை சிலுவையில் அறைந்து கொன்ற போதிலும்கூட, ஒருவருக்காவது முள்முடி சூட்டவில்லை.

முள்முடி சூட்டப்பட்டவராய், சிலுவையிலே தொங்கினவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. அவர் உங்களுக்காக முள்முடி சூட்டப்பட மகிழ்ச்சியோடு தம்மை ஒப்புக்கொடுத்தார். இஸ்ரவேல் தேசத்தில் ஏறக்குறைய இருபத்தி நான்கு வகையான கொடிய முட்களுண்டு. அதில் மிகவும் கூர்மையான விஷம் நிறைந்த ஒரு வகை முள்ளைத்தான் இயேசுவின் சிரசில் சூட்டுவதற்காக தெரிந்தெடுத்தார்கள்.

பாதாளத்தின் வல்லமை கட்டவிழிக்கப்பட்டிருந்த நேரம் அது. சாத்தான் முழு மூர்க்கமாய் தேவகுமாரனின் மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைந்திருந்த சந்தர்ப்பம் அது. சரித்திர ஆசிரியர்கள் கூறும்போது இயேசுகிறிஸ்துவை ஏறக்குறைய அறுநூறு போர்ச்சேவகர்கள் சூழ நின்று சித்திரவதை செய்தார்கள் என்று எழுதுகிறார்கள். உருட்டு கட்டையினாலும், தடியினாலும், முள்முடி சூட்டப்பட்ட அவருடைய தலையை அடித்து நொறுக்கினார்கள். விஷம் நிறைந்த கொடிய முட்கள் அவர் தலையில் ஆழமாய் இறங்கியது. சில வரலாற்று புஸ்தகங்கள், அவருடைய தலையின் வழியாக இறங்கிய அந்த முட்கள் கண்களின் வழியாக புடைத்துக் கொண்டு வந்தது என்று சொல்லுகின்றன.

ஏசாயா சொல்லுகிறார்: “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (ஏசா. 53:2). “மனுஷனைப் பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப் பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்” (ஏசா. 52:14).

இயேசுவின் தலையில் ஏன் முள்முடி சூட்டப்பட வேண்டும்? ஏன் அது அவருடைய இரத்தத்தை வரவழைக்க வேண்டும்? முட்கள் என்பது சாபங்களைக் குறிக்கிறது. அது கர்த்தருடைய இரண்டாவது சிருஷ்டிப்பு. ஆதாம் பாவம் செய்தபோது அந்த பாவத்தின் விளைவாக பூமி சபிக்கப்பட்டது. சபிக்கப்பட்ட இந்த பூமி முள்ளையும் குருக்கையும் முளைப்பித்தது (ஆதி. 3:17,18).

அநேகருடைய கொடிய பாவங்கள் சாபங்களாகி, குடும்பங்களை முட்களைப் போல கிழிக்கின்றன. தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து வருகின்றன (யாத். 34:7, எண். 14:17). முட்கள் தேவனிடத்திலிருந்து வந்த சாபமாகையால் தேவன்தாமே அதை முறிக்க வேண்டியதாயிற்று. ஆகவேதான் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து சாபத்தை கொடிய முட்களாக தன் தலையின் மேல் சுமந்தார். அந்த முள்முடி சூட்டப்பட்டு தலையிலிருந்து வழிகிற இரத்தமே சகல சாபங்களையும் தகர்த்து விடுதலையைக் கொண்டு வருகிறது. நினைவிற்கு:- “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்” (கலா. 3:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.