AppamAppam - Tamil

Mar 29 – மேலாவாய்!

“கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாக்காமல் மேலாவாய்” (உபா. 28: 14).

நீங்கள் ராஜாதி ராஜாவினுடைய பிள்ளைகள். கர்த்தர் உங்களைக் குறித்து என்ன விரும்புகிறார்? நீங்கள் தலையாக வேண்டும் என்பதும், மேலாக செழித்தோங்க வேண்டும் என்பதுமே அவருடைய பிரியம். ஆகவேதான் ‘நீ வாலாகாமல் தலையாவாய், கீழாகாமல் மேலாவாய்’ என்று சொல்லுகிறார்.

ஒருவரும் வாலாக விரும்புவதில்லை. தோல்வியை யாருடைய உள்ளம்தான் விரும்பும்? ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இயற்கையாகவே மற்றவர்களால் பாராட்டப்படுகிற உன்னத நிலையை அடைய வேண்டுமென்கிற வாஞ்சையுண்டு. ஆகவேதான் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுகிறார்கள்.

கர்த்தர் யாரை வழி நடத்துகிறாரோ, அவர்கள் நிச்சயமாகவே உயர்ந்திருப்பார்கள். வாலாகாமல் தலையாவார்கள். வேதம் சொல்லுகிறது; “கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்” (உபா. 32:13).

 யோசேப்பைப் பாருங்கள்! அடிமையாய் விற்கப்பட்டு எகிப்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். கர்த்தரோ, அவனை எகிப்து முழுவதற்கும் அதிகாரியாக்கினார். தன்னை உயர்த்தின கர்த்தரை யோசேப்பு மறந்துவிடவில்லை. தன் சகோதரர்களைப் பார்த்து: “நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்” (ஆதி 45:8) என்று சொன்னான். “கர்த்தர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்” (1 சாமு. 2:8).

 தாவீதின் உயர்வைப் பாருங்கள்! ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அவரை கர்த்தர் சவுலின் குடும்பத்தாருக்கு முன்பாக மேன்மைப்படுத்தி, முழு இஸ்ரவேலின் ராஜ்யபாரத்தையும் கொடுத்தார். கர்த்தர் சொல்லுகிறார், “நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்” (2 சாமு. 7:8,9).

தேவபிள்ளைகளே, தானியேலைப் பாருங்கள்! பாபிலோன் சிறையிருப்பிலே நேபுகாத்நேச்சாரால் சிறைப்பிடிக்கப்பட்டுபோன அவரை கர்த்தர் மிகவும் உயர்த்தினார். வேதம் சொல்லுகிறது, “அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்” (தானி. 2:21). நினைவிற்கு :- “அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” (ஏசா. 58:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.