No products in the cart.
Mar 11 – மனம் புதிதாகுங்கள்!
“தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோம. 12:2).
மனம் புதிதாகட்டும். தெளிவுள்ள மனமே ஆரோக்கியமான சிந்தனைகளைக் கொண்டுவரும். ஆரோக்கியமான சிந்தனைகள் வலுவுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஒரு மனுஷனுடைய மனதில் ஓடும் சிந்தனைகள் கர்த்தருக்கு நேராய் திருப்பப்படும்போது, அவனுடைய முழு சரீரமும், வாழ்க்கையும் ஆசீர்வாதமுள்ளதாய் இருக்கும். குதிரைக்கு கடிவாளமிட்டு அதை திருப்புவதைப்போல, உங்களுடைய ஆத்துமாவுக்கு வேத வசனமாகிய கடிவாளமிட்டு, கர்த்தர் பக்கமாய்த் திருப்பும்போது, நீங்கள் நித்திய ஆசீர்வாதத்தையும், நித்திய பேரின்பத்தையும் பெற்றுக்கொள்ளுவீர்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய அனைத்துமே முக்கியமானவை.
பழங்காலத்தில் வாழ்ந்த கிரேக்கர்கள், ஆத்துமாவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார்கள். சரீரத்தின் மேன்மைகளைக் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்பது அவர்களுடைய தத்துவம். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஆத்துமாவிலே மாத்திரம் அக்கறையெடுத்து, சரீரத்தை புறக்கணிக்கக் கூடாது. ஆத்துமாவுக்கு முக்கியத்துவம் செலுத்துகிறதைப்போலவே, சரீரத்திற்கும் முக்கியத்துவம் செலுத்தவேண்டும். ஏனென்றால் உங்களுடைய சரீரம் தேவன் தங்கும் ஆலயமாயிருக்கிறது. அப். பவுல், “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரி. 6:19) என்று குறிப்பிடுகிறார்.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? சரீரம் இருந்தால் தானே கர்த்தருக்காக உழைக்க முடியும்? நீங்கள் இந்த சரீரத்தில் தங்கியிருக்கிற நாட்களில்தான் கிறிஸ்துவுக்காக சிலுவை சுமக்கவும், கர்த்தரைத் துதிக்கவும், பாடவும், சாட்சி கொடுக்கவும், பிரசங்கிக்கவும், ஊழியம் செய்யவும் முடியும்.
அப். பவுல், நீங்கள் உங்கள் சரீங்களை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று கேட்கிறார். மாத்திரமல்ல, ‘உங்களுடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்’ என்றும் சொல்லுகிறார். சிலர் உலகத்திற்குரிய வேஷம் தரிக்கிறார்கள். வாரத்தின் ஆறு நாட்களும் உலகத்தாரைப்போல நடந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமையானால் கிறிஸ்தவர்களைப் போல வேஷம் தரித்துக் கொள்ளுகிறார்கள்.
இன்னும் சிலர் அரசாங்க ஸ்காலர்ஷிப்புக்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்கான சலுகைகளுக்காகவும் புறஜாதியாரின் பெயர்களை இரட்சிக்கப்பட்ட பிறகு வைத்துக் கொள்ளுவார்கள். உலகத்தாரை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தரை ஏமாற்ற முடியாது. உங்களுடைய மனம் புதிதாக வேண்டும். அப்போதுதான் உங்களால் மறுரூபமாக முடியும். தேவபிள்ளைகளே, கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் அவருக்கு முன்பாக கறையற்றதாக காணப்படவேண்டும். அதற்காக இப்பொழுதே உங்களை ஆயத்தப்படுத்துவீர்களாக! நினைவிற்கு:- “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2).