No products in the cart.
Mar 2 – மறு உத்தரவு!
“அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன்” (சங். 91:15).
இன்றைக்கு கிறிஸ்தவர்களாயிருந்தும் அநேகருக்கு ஜெபிக்கத் தெரிவதில்லை. ஏதாவது பிரச்சனை வருமென்றால், அந்தப் பிரச்சனைக்கு ஏற்ப ஒரு ஜெபம் ஆயத்தப்படுத்திக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். பாரம்பரியமான ஜெபத்திலும், மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் ஜெபத்திலும் அநேகர் நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஜெபம் என்பது, சொந்த தகப்பனிடத்திலே பிள்ளை மனம் திறந்து பேசுவதைப் போலாகும். கர்த்தர் ஆடம்பரமான ஜெபத்தையோ, எழுதி வைத்து வாசிக்கும் ஜெபத்தையோ விரும்புவதில்லை. மனம் திறந்து, மனம் விட்டு, மனதைக் கொட்டி ஜெபிக்கும் ஜெபத்தையே அவர் எதிர்பார்க்கிறார்.
இந்த ஜெபம் என்பது டெலிபோனிலே ஒருவரோடொருவர் பேசுவதைப் போன்றதாகும். நீங்கள் டெலிபோனில் பேசுவதற்கு முன்பு, மறுகரையில் உங்களோடு பேச அடுத்தவர் நின்று கொண்டிருக்கிறார் என்பதை அறிகிறீர்கள். எத்தனை மைல் தூரத்திற்கும் அப்பால் அவர்கள் இருந்தாலும் உங்களுக்கு மிக அருகிலே இருப்பதைப் போல எண்ணி அவர்களோடு பேசுகிறீர்கள்.
அதைப் போல ஜெபிக்கும்போது, மறுபக்கத்தில் இயேசு கிறிஸ்து நின்று கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும்போதே அவர் செவிக்கொடுக்கிறார். உங்களுடைய நினைவுகள், தோற்றங்கள் எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். வாயில் சொல் பிறவாததற்கு முன்னே அவர் அதை அறிந்திருக்கிறார். கர்த்தர் சொல்லுகிறார், “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (சங். 91:15).
ஒரு முறை ஜார்ஜ் முல்லர் க்யூபெக் என்ற இடத்திற்கு ஜெபக்கூட்டம் நடத்தும்படி கப்பலில் சென்றார். நடு சமுத்திரத்தில் மூடுபனி மிகவும் அதிகமாய் இறங்கியது. கப்பல் பயணம் செல்ல முடியாதபடி நின்று விட்டது. ஜார்ஜ் முல்லர் மாலுமியைப் பார்த்து “நான் எப்படியாவது நாளை காலைக்குள் அந்தப் பட்டணத்தை அடைய வேண்டும்” என்றார். ஆனால் மாலுமிக்கோ, அது சாத்தியமானதாய் தோன்றவில்லை. ஆகவே ஜார்ஜ் முல்லர் அந்த மாலுமியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று ஊக்கமாய் ஜெபிக்கலானார். அது வல்லமையான ஜெபம். கர்த்தரிடத்தில் மனம் திறந்து பேசுகிற ஜெபம். மட்டுமல்ல, மூடுபனிக்கும், இயற்கைக்கும் கட்டளைக் கொடுக்கிற ஜெபமாயிருந்தது.
அவர்கள் நீண்ட நேரம் ஜெபித்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கே மூடுபனி எல்லாம் விலகியிருப்பதைக் கண்டார்கள். கப்பல் மிக வேகமாய்ச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் நகரத்தை அடைந்தது. கர்த்தர் தங்கள் ஜெபத்திற்கு பதிலளித்ததற்காக ஜார்ஜ் முல்லரும், மாலுமியும் கர்த்தரை ஸ்தோத்தரித்தார்கள். தேவபிள்ளைகளே, ஜெபியுங்கள். நீங்கள் கேட்கிறவைகளை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்.
நினைவிற்கு:- “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” (ஏசா. 65:24).