No products in the cart.
Feb 24 – பொக்கிஷம்!
“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” (மத். 6:20).
ஒரு முறை, அயல்நாட்டில் நர்ஸாக பணிபுரிந்து வந்த ஒரு சகோதரி, சட்ட விரோதமாக தான் வைத்திருந்த தங்கத்தை இந்திய நாட்டுக்குள் கடத்த முற்பட்டாள். அவள் ஆஸ்பத்திரியிலே பிறந்து, இறந்த ஒரு குழந்தையின் வயிற்றைக் கீறி, அதற்குள்ளே அந்த தங்கத்தையெல்லாம் வைத்து, தன்னுடைய சொந்த குழந்தையைப் போல் அணைத்துக் கொண்டு விமான நிலையத்திற்குள் வந்தாள். ஆனால், அங்கிருந்த இரகசிய மின்சார இயந்திரங்கள் சத்தமிட்டு, அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டன. அந்தோ! பரிதாபம்! அவள் கைது செய்யப்பட்டாள்.
இன்றைக்கு மனிதன் தனக்கென்று பொக்கிஷங்களைத் தேடுவதிலேயே ஆர்வமாய் இருக்கிறான். சிலருக்கு நகைகள், சிலருக்கு உயர்ந்த பதவி, சிலருக்கு ஞானம் பொக்கிஷமாக இருக்கிறது. சாலொமோன் ஞானி, இந்த பொக்கிஷங்களை யெல்லாம் மாயை, மாயை, மாயை. மனதுக்கு சஞ்சலமானது என்கிறார்.
இந்தப் பூமியும், இந்தப் பூமியிலுள்ள பொக்கிஷங்களும் ஒரு நாள் அழிந்துபோகும். காணப்படுகிற இந்த உலகமானது, அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது (2 பேது. 3:7). நீங்கள் இந்த உலகத்தில் எதைச் சேர்த்து வைத்தாலும் அது அக்கினிக்கு தப்புவதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் பட்டணத்தை, சதாம் உசேன் படைகள் வந்து பிடித்தது. அவர்கள் அங்குள்ள எல்லாத் தங்க நகைக்கடைகளையும் சூறையாடினார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் புகுந்து பொக்கிஷங்களைக் கொள்ளையடித்தார்கள். இயேசு சொன்னார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்” (மத். 6:19).
பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கக்கூடிய ஒரு நல்ல இடம் பரலோக ராஜ்யம்தான். அங்கே கள்ளரும் இல்லை; பூச்சியும் துருவும் அதை அழிப்பதில்லை. பரலோகத்தில் எப்படி பொக்கிஷத்தைச் சேர்த்து வைப்பது? ‘இந்தச் சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்’ என்று இயேசு சொன்னார். கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு கொடுக்கும்போது, சுவிசேஷ ஊழியர்களைத் தாங்கும்போது, ஆத்தும அறுவடைப் பணிக்காக உதாரத்துவமாய் செலவழிக்கும்போது, அவைகள் பரலோகத்தில் பொக்கிஷமாக காணப்படும்.
‘உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்’ என்று இயேசு சொன்னார். இதிலே ஒரு பெரிய இரகசியம் அடங்கியிருக்கிறது. பாருங்கள், ஒரு மனிதனுடைய இருதயமும், அவனுடைய பொக்கிஷமும் இணைபிரியாதபடி ஒன்றாக இருக்கிறது. பணத்தை பொக்கிஷமாக எண்ணுகிறவர்கள், பணத்திற்காகவே வாழுவார்கள். குடும்பத்தை பொக்கிஷமாக எண்ணுகிறவர்கள், குடும்பத்திற்காக எந்த தியாகமும் செய்வார்கள். அப்படியானால், கர்த்தருடைய ஊழியத்தை மேன்மையாய் எண்ணுகிறவர்கள் கர்த்தரையே பொக்கிஷமாகக் கொண்டு அவருக்காகவே ஜீவனை அர்ப்பணிப்பார்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ.3:1).