AppamAppam - Tamil

Feb 15. புருஷனான போதோ!

“நான் புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” (1 கொரி. 13:11).

அப். பவுல், ‘நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போல் பேசினேன்; குழந்தையைப்போல் சிந்தித்தேன்; குழந்தையைப்போல் யோசித்தேன். ஆனால், நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன்’ என்று சொல்லுகிறார்.

குழந்தையின் யோசனை எப்படியிருக்கும்? ஒரு குழந்தை கீழே விழுந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே வீல் என்று அழுகிறது, தாய் எவ்வளவோ தேற்றிப் பார்க்கிறாள். குழந்தை அழுகையை நிறுத்துவதில்லை. முடிவிலே, அந்த தாய் குழந்தை விழுந்த இடத்தை ஓங்கி இரண்டு அடி அடித்து, ‘நான் அடித்து விட்டேன். அழாதே’ என்று சொன்னதும் அழுகையை நிறுத்துகிறது. இதுதான் குழந்தை யோசிக்கும் விதம். பெரியவனான பிறகும் இப்படியே யோசிக்க முடியுமா?

 எந்தத் தாயும் தன் குழந்தை அறிவுடையதாகவும், பொறுப்பானதாயும் இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பாள். அதைப்போல, நீங்கள் ஆவிக்குரிய தகப்பனாத் திகழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். வேதம் சொல்லுகிறது: “பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்க மில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும்…” (எபி. 5:13,14).

அநேகர் பல ஆண்டு கிறிஸ்தவர்களாக இருந்தும் பாலுண்ணுகிறவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தானாக வேதத்தை வாசிப்பதில்லை, தியானிப்பதுமில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும், போதகர் பிரசங்கிக்கும் பிரசங்கமாகிய பாலை உண்டால் போதும் என்று எண்ணுகிறார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டு கர்த்தருக்குள் திடன்கொண்டு எழும்பிப் பிரகாசிப்பீர்களாக.

“நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்” (எபே. 4:14,15).

 ஒரு குழந்தைக்குத் தகப்பனுடைய சொத்துக்கள் மற்றும் சுதந்திரங்கள் என்னவென்று தெரியாது. அது மற்றவர்கள் வாங்கிக் கொடுக்கும் மிட்டாயிலேயே மனமகிழ்ச்சியாய் இருந்துவிடுகிறது. ஆனால் வளர்ந்தபிறகு அதை மிட்டாய் கொடுத்து ஏமாற்ற முடியாது. அது தகப்பனுடைய சுதந்தரங்களை உரிமையோடு கேட்கும். அதுபோல நீங்கள் புருஷராகும்போது கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கிற சுதந்திரங்களை அறிந்து கொள்ளுகிறீர்கள். தேவபிள்ளைகளே, நித்திய ஆசீர்வாதங்களை ஒருபோதும் உலக இன்பங்களாகிய மிட்டாகளுக்கு விற்று போடாமல், கர்த்தருக்காக வல்லமையாகச் செயலாற்றுவீர்களாக.

நினைவிற்கு:- “இனி உன்பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்” (ஆதி. 17:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.