No products in the cart.
Jan 30 – சொப்பனங்களும், தரிசனங்களும்!
“உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்” (யோவேல் 2:28).
கடைசி நாட்களில் கர்த்தர் தம்முடைய ஆவியை மாம்சமான யாவர் மேலும் ஊற்றும்போது, அநேக காரியங்கள் சம்பவிக்கின்றன. அந்த ஆவியின் அபிஷேகத்தினால் குமாரரும் குமாரத்தியும் தீர்க்கதிரிசனம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். மூப்பர் சொப்பனங்களையும், வாலிபர் தரிசனங்களையும் காண்கிறார்கள். ஊழியர்களுக்கும் ஊழியக்காரிகளுக்கும் ஆவியின் வரங்கள் கொடுக்கப்படுகிறது. எருசலேமின் குடிகள் மேலும், தாவீதின் குடும்பத்தார் மேலும் கிருபையின் ஆவியும் விண்ணப்பத்தின் ஆவியும் ஊற்றப்படுகிறது. ஆ! எத்தனை மகிமையான நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
‘மூப்பர் சொப்பனங்களையும், வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்’ என்ற பகுதியை தியானித்துப் பாருங்கள். மூப்பர் என்ற வார்த்தை இந்த இடத்தில் வயது முதிர்ந்தவர்களைக் காண்பிக்கிறது. பொதுவாக, அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியர்களாய் இருப்பவர்களில் அநேகர் “இனி நமக்கு என்ன இருக்கிறது? இளமையின் பெலனில்லை, சரீரத்தில் உறுதியில்லை. கால்கள் தள்ளாடுகிறது. எப்படியோ நல்ல மரணம் கிடைத்தால் போதும்” என்று எண்ணிவிடுகிறார்கள். ஆனால் கர்த்தரோ, அவர்களுக்கென்றும் ஊழியத்தை வைத்திருக்கிறார். ஆவியை ஊற்றி அவர்களுக்கு சொப்பன வரத்தைத் தருகிறார். சொப்பனங்கள் மூலமாக வருங் காரியங்களை அறிவிக்க வைக்கிறார். கர்த்தர் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
மறுபக்கம் வாலிபரைப் பாருங்கள், வாலிபர் என்றாலே, அனுபவமில்லாத இளமைப் பருவம். அவசரப்பட்டு துடுக்காக எதையாகிலும் ஒன்றை செய்துவிட்டு வேதனைப்படுகிற பருவம். ஆனால் ஆண்டவரோ அவர்களையும் நேசித்து, அவர்கள் மேல் அபிஷேகத்தை ஊற்றி, தரிசனங்களைக் கொடுக்கிறார். தரிசனமுள்ள வாழ்க்கை வாழும்படி அவர் எதிர்பார்க்கிறார். சொப்பனங்களைக் காண்பார்கள், தரிசனங்களை அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. காண்பது வேறு, அடைவது வேறு. நீங்கள் காணக்கூடியவைகளாயிருந்தால் கர்த்தர் உங்களுக்குத் துணை நின்று, அதை அடையும்படியும் உதவி செய்வார்.
முதலாவது, உங்களுடைய வாழ்க்கையின் தரிசனம் என்ன என்பதைக் காணுங்கள். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, வாழ்க்கையின் நோக்கம் என்ன, எதை எதிர்பார்த்து செல்லுகிறீர்கள் என்பதைக் காணுங்கள். அந்த தரிசனத்தோடு முன்னேறிச் செல்லுங்கள். கர்த்தர் அப்படியே அதை அடையும்படி செய்வார் என்று விசுவாசியுங்கள்.
போதகர் பால்யாங்கி சோ தனது சபையை ஆரம்பித்தபோது, அங்கே ஐந்தே ஐந்து விசுவாசிகள்தான் இருந்தார்கள். ஆனாலும் அவருக்கு ஒரு குறிக்கோளும், தரிசனமும் இருந்தன. தன் சபையில் ஐயாயிரம் பேர் இருப்பதை மனக்கண்களினால் கண்டார். அந்த தரிசனத்தோடு வாழ்ந்து, இடைவிடாமல் அதற்காக ஜெபித்ததின் விளைவாக கர்த்தர் ஐந்தாயிரம் ஆத்துமாக்களைக் கொடுத்தார். இன்று அவர் பல இலட்சம் ஆத்துமாக்கள் என்ற தரிசனத்தோடு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார். ஆம், வாலிபர்கள் தரிசனங்களை அடைவார்கள்.
நினைவிற்கு:- “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு” (ஆபகூக் 2:3).