AppamAppam - Tamil

Jan 23 – சிநேகிதனின் அடிகள்!

“சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்” (நீதி.27:6).

உண்மையான சிநேகிதர்கள், உங்களுடைய குறை குற்றங்களை அன்போடு உணர்த்துகிறார்கள். அவர்கள் ஒருநாளும் உங்களுடைய செயல்களை வெளியிலே தாரை ஊதி, கொட்டு அடித்து, பரப்பித் திரிகிறவர்கள் அல்ல. உங்களுடைய முன்னேற்றத்தில் உண்மையான அன்பும் கரிசனையும் கொண்டவர்கள். ஆகவேதான் சாலொமோன் ஞானி, “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” என்று சொல்லுகிறார்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலே, நட்புகூட சுய நலமாய், வியாபாரமாய் மாறிவிட்டது. ‘என்னை அவருக்கு அறிமுகம் செய்து வையுங்கள். அவருடைய நட்பு கிடைக்குமென்றால் நான் முன்னேறி விடுவேன்’ என்று சுயநலமாய் எண்ணுகிறார்கள். மாமாலமான பசப்பு வார்த்தைகளைப் பேசி வஞ்சனையாகப் பழகுகிறார்கள். “ரபீ, நீர் வாழ்க” என்று யூதாஸ் முத்தம் கொடுத்து முடிவில் இயேசுவைக் காட்டிக் கொடுத்ததுபோல சுயரூபத்தை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

நட்பை விரும்புகிறவன் முதலாவது தன்னுடைய உள்ளத்தின் ஆழத்தையும், அன்பையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். “நண்பர்களை சம்பாதிப்பது எப்படி?” என்ற புஸ்தகம் லட்சம் லட்சமாக விற்கப்பட்டது. அதிலே ஆசிரியர் ‘உங்களுடைய சுயமுயற்சியினால் இரண்டு ஆண்டுகளில் ஓடி ஓடி சம்பாதிக்கும் நண்பர்களைப் பார்க்கிலும், அதிகமான நண்பர்களை உங்களுடைய உண்மையான அன்பையும், கரிசனையையும் காட்டி சேர்த்து விடலாம்’ என்று எழுதுகிறார்.

நீங்கள் ஒருவருடனான நட்பை வளரச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அவருடன் அதிக நேரம் செலவழியுங்கள். அவருடைய சுக நலன்கள் குறித்து விசாரியுங்கள். நேரில் சந்திக்க இயலாமல் போனாலும் டெலிபோன் மூலமாவது, அல்லது கடிதங்கள் மூலமாவது அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருங்கள். அன்பின் அக்கினி அவிந்து போகாமல் இருக்கட்டும்.

கிறிஸ்து உங்களோடுள்ள நட்பை உறுதி செய்து கொள்ளும்படி, உங்களுடைய வீட்டைத் தேடி வருகிறார். உங்கள் வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறார். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் நான் அவனிடத்தில் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன் என்று அன்போடு அழைக்கிறார் (வெளி. 3:20). கர்த்தர் உங்கள்மேல் வைத்த அன்பினாலே பரலோக மேன்மையை விட்டு பூமிக்கு இறங்கி வந்தார் அல்லவா? நம்மைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவரானார் அல்லவா? அடிமையின் ரூபமெடுத்து சிலுவை சுமந்தார் அல்லவா? அந்த நட்புறவுக்கு ஈடாக நீங்கள் என்னத்தைச் செலுத்த முடியும்?

கர்த்தருடைய அன்பைக் குறித்து மிக அருமையான ஒரு பாடல் உண்டு. “உந்தன் சிநேக வாக்குகள், என்றும் மாறிடாததால், என்னை என்றும் வழிநடத்தும், உந்தன் ஜீவபாதையில்” என்பதே அந்த பாடல். அந்தப் பாடலை பாடும்போது, கர்த்தருடைய உச்சிதமான சிநேகிதத்தை உணர முடிகிறது. தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளத்திலும் அந்த சிநேகிதமும், அன்பும் நிரம்புவதற்கு இடங்கொடுங்கள்.

நினைவிற்கு:- “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (1 கொரி.13:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.