No products in the cart.
Jan 12 – சத்துருக்களுக்கு முன்பாக!
“என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங். 23:5).
நீங்கள் எப்பொழுதெல்லாம் சத்துருவை பார்க்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்பதையும் நினைவுகூருங்கள்.
தாவீதுக்கு ஏராளமான சத்துருக்கள் இருந்தார்கள். முதலில் அதைக் குறித்து தாவீதுக்கு மிகுதியான கவலையும் துயரமும் இருந்திருக்கக்கூடும். ஆனால், முடிவில் சத்துருக்களால் எவ்வளவுக்கெவ்வளவு நிந்திக்கப்பட்டாரோ, அவ்வளவுக் கவ்வளவு அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். தாவீதின் சொந்த சகோதரர்கள் சத்துருக்களாய் மாறினபோது, கர்த்தர் அவர்கள் மத்தியிலே தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.
என்னுடைய தகப்பனார் பதினாறு ஆண்டுகள் அரசாங்கத்திலே பணியாற்றிவிட்டு கிறிஸ்தவ உலகத்திலே முழு நேர ஊழியக்காரனாய் இறங்கி வந்தார். ‘அநேக ஆவிக்குரிய தகப்பன்மார்கள் என்னை அரவணைப்பார்கள், ஆலோசனை கூறுவார்கள், உற்சாகப்படுத்துவார்கள்’ என்றெல்லாம் அவர் எண்ணினார். ஆனால் அவருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டு பலர் அவரைப் பகைத்தார்கள், ஒரு எழுத்தாளர் பொய்யையும், புரட்டையும் கலந்து பலவாறாக எழுதினார். தங்கள் எழுத்து திறமையினால் அவதூறு சேற்றை அவர்மேல் வீசினார்கள்.
அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு என் தகப்பனாரை இகழ்ந்து எழுதினார்களோ, அவ்வளவுகவ்வளவு கர்த்தர் அவரை ஊழியத்திலே உயர்த்திக் கொண்டே போனார். ஒவ்வொரு முறையும் சத்துருக்களுக்கு முன்பாக அவருக்கு ஒரு பந்தியை ஏற்படுத்தினார். தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணி ஆவியின் வரங்களையும், வல்லமைகளையும் அதிகமாகக் கொடுத்தார். அவர்கள் என் தகப்பனாரின் பெயரைக் கெடுத்து எழுதும்போதெல்லாம் கர்த்தர் தனக்காக வைத்திருக்கிற மகிமையான பந்தியை தன் விசுவாச கண்களினால் என் தகப்பனார் ஆவலுடன் எதிர்பார்த்தார். பெற்றுக்கொள்ளவும் செய்தார்.
இஸ்ரவேல் ஜனங்களை, அவர்களது சத்துருக்களான எகிப்தியர்கள் சிவந்த சமுத்திரம் வரையிலும் துரத்திக் கொண்டே வந்தார்கள். துரத்துவதற்கு கர்த்தர் அவர்களுக்கு அனுமதி அளித்திருந்தார். இஸ்ரவேலரை துரத்துவதும், அவர்களை நிந்திப்பதும், பரியாசம் செய்வதும் சத்துருக்களுக்கு மிகவும் விருப்பமாயிருந்தது. முடிவாக, ஒரு நாள் சிவந்த சமுத்திரத்தில் அவர்களை கவிழ்த்துப் போட்டார். இஸ்ரவேலருக்கோ அன்று முதல் கர்த்தர் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்து விசேஷித்த பந்தியை கட்டளையிட்டார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் ஒருவேளை நிந்தையும், அவமானமும் நிறைந்த பாதையிலே நடக்கக்கூடும். உங்களுக்கு சத்துருக்கள் ஏராளம் பெருகியிருந்திருக்கக் கூடும். கவலைப்படாதேயுங்கள். கர்த்தர் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிச்சயமாகவே ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துவார்.
நினைவிற்கு:- “உனக்குச் சகாயஞ் செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய்” (உபா. 33:29).