No products in the cart.
Jan 5, 2021- சகோதர ஐக்கியத்தில் சந்தோஷம்!
“உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்” (யாத். 4:14). இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1).
மோசேயைப் பார்க்க ஆரோன் வருவதைக் குறித்து, “அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்” என்று கர்த்தர் சொன்னார். ஒரே பரம தகப்பனுடைய பிள்ளைகளாயிருந்து, ஒரே கல்வாரி அன்பினால் தாகம் தீர்க்கப்பட்டு, ஒரே ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் ஒருவரையொருவர் காணும்போது களிகூர்ந்து மகிழுவது இயற்கைத்தானே! ஆம், சகோதரர்களின் ஐக்கியத்தில் ஒரு சந்தோஷமுண்டு.
அன்று மோசேயைக் கண்டு ஆரோன் மனம் மகிழ்ந்ததுபோலவே இயேசுவின் தாயாகிய மரியாளைக் கண்ட எலிசபெத்தின் உள்ளமும் களிகூர்ந்தது. அந்த களிப்பு அவளுக்கு மாத்திரமல்ல, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளைக்கும்கூட உண்டாயிற்று. வேதம் சொல்லுகிறது, “சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள்” (லூக். 1:40,41).
கர்த்தருடைய பிள்ளைகள் ஒருவரையொருவர் வாழ்த்தும்போது, ஒருவரோடொருவர் கைக்கோர்த்து நிற்கும்போது, அவர்களுடைய முழு உள்ளமும் மகிழ்ந்து களிகூருகிறது. சகோதரர்களின் ஐக்கியம் எத்தனை இனிமையானது! எத்தனை மேன்மையானது! மோசேயைக் கண்டவுடன் ஆரோனுடைய உள்ளத்தில் அன்பு பொங்கினது. மகிழ்ச்சி பொங்கினது. அதோடல்லாமல் மோசேயின் அருகில் வந்து அவனை முத்தஞ்செய்தான் (யாத். 4:27). இதைப் பார்த்த மற்றவர்கள் உள்ளத்திலும்கூட ஒரு தெய்வீக அன்பு பெருகியிருக்குமல்லவா? ஆகவேதான் அப். பவுல் “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்” (ரோம. 16:16) என்று குறிப்பிடுகிறார்.
இன்று கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பெரிய குறைபாடு என்னவென்றால், அன்பு தாழ்ச்சிதான். விசுவாசிகளானாலும், ஊழியர்களானாலும் சரி ஒருவரையொருவர் காணும்போது, அவர்களுடைய இருதயம் மகிழுவதில்லை. சபை பாகுபாடு என்ற பெயரில் ஒருவரையொருவர் பகைக்கிறார்கள். வேறுபாட்டின் உபதேசம் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை அற்பமாய் எண்ணுகிறார்கள். ஆவிக்குரிய பெருமையடைந்து, கிறிஸ்துவுக்குள் சிறிய சகோதரர்களை அற்பமாய் எண்ணுகிறார்கள்.
ஆலய ஆராதனைக்கு வரும்போது சகோதர, சகோதரிகளைச் சந்திக்கிறீர்கள். உள்ளத்தில் ஆனந்த பரவசம் உண்டாகிறது. நீங்கள் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்திருந்தாலும் சிலுவையண்டைவந்து நிற்கும்போது எல்லாரும் ஒரே குடும்பமாகிறீர்கள். எல்லாரையும் ஒரே கல்வாரியின் இரத்தம் மீட்டெடுத்திருக்கிறது. ஒரே ஆவியினால் நீங்கள் தாகம் தீர்க்கப்பட்டிருக்கிறீர்கள். தேவபிள்ளைகளே, ஒரே பரமபிதா உங்களுக்கு உண்டல்லவா?
நினைவிற்கு:- “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ் செய்தான்” (லூக். 15:20).