AppamAppam - Tamil

Jan 4, 2021 – இரட்சிப்பிலே சந்தோஷம்!

“உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்” (1 சாமு. 2:1).

கர்த்தர், வேதம் முழுவதிலும் சந்தோஷத்தை நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். அதில் முதல் சந்தோஷமும், மிகப் பெரிய சந்தோஷமும் இரட்சிப்பினாலே உண்டாகும் சந்தோஷமேயாகும். ஒருவன் இரட்சிக்கப்படும்போது, முதலாவது அவனுக்கு பெரிய சந்தோஷம் வருகிறது. பாவங்கள் மன்னிக்கப்பட்டதினால் மனசாட்சி மிருதுவாகிறது. பாவ பார சுமை விலகிவிடுவதினால் சந்தோஷம் உண்டாகிறது. இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசு கிறிஸ்து உள்ளே வந்து வாசம் செய்வதினால் அவனுக்கு இன்னும் அதிகமான சந்தோஷம் உண்டாகிறது.

ஒருவர் பெரிய தொழிற்சாலை ஒன்றை நிறுவி, பெரிய செல்வந்தனாகி விட்டார். ஆனால் அவருடைய உள்ளத்திலோ சந்தோஷமில்லை. எப்பொழுதும் பதட்டமும், தன்னை மற்றவர்கள் ஏமாற்றிவிடுவார்களோ என்கிற பயமும் அவரை வாட்டி வதைத்தன. தொழிற்சாலையின் நெருக்கடிகள் அவருடைய இருதயத்தில் சமாதானத்தை இழக்கச் செய்தன.

ஒரு நாள் அவர் ஒரு தேவனுடைய ஊழியரோடு தனிமையிலே சற்று நேரத்தை செலவழிக்க விரும்பினார். அந்த ஊழியரைப் பார்த்து, “ஐயா, கிறிஸ்தவர்களுடைய முகமெல்லாம் சந்தோஷமாய் இருக்கிறதைக் கண்டிருக்கிறேன். அந்த சந்தோஷத்தின் வழி என்ன என்று எனக்குச் சொல்லித் தருவதுடன் அந்த சந்தோஷத்திற்குள் என்னை வழி நடத்துவீர்களா?” என்று கேட்டார்.

இதுதான் தக்க தருணம் என்று எண்ணி, அந்த ஊழியர் அவரை அன்போடு கல்வாரி சிலுவையண்டை வழி நடத்தினார். மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் குறித்துப் பேசினார். அந்த செல்வந்தன் தன்னைத் தாழ்த்தி ஒப்புக்கொடுத்து, பாவங்களை அறிக்கை செய்தபோது, அவருடைய உள்ளத்தில் பெரிய சந்தோஷம் வந்துவிட்டது.

அப்போது அவர் அங்கேயிருந்த பல பூக்களைப் பார்த்தார். ‘எவ்வளவு அழகான பூக்கள்’ என்று சந்தோஷப்பட்டு களிகூர்ந்தார். ஆறுகளைப் பார்த்தார். ‘என் ஆண்டவர் எனக்காக உண்டாக்கின ஆறுகள் அல்லவா’ என்று சொல்லி களிகூர்ந்தார். மலைகளைப் பார்த்து, ‘மலைகள் இவ்வளவு அழகாய் இருந்தால் அதை உருவாக்கிய என் தேவன் எவ்வளவு அழகாய் இருப்பார்’ என்று சொல்லி களிகூர்ந்தார். ஏற்கெனவே அங்கே பூக்கள், ஆறுகள், மலைகள் இருந்தது உண்மைதான். ஆனால் அதைப் பார்த்து அவர் களிகூர்ந்ததில்லை. இரட்சிக்கப்பட்ட பின்போ எதைப்பார்த்தாலும் அவருக்கு களிகூருதலும், மகிழ்ச்சியும் உண்டாயின. காரணம், இயேசு உள்ளத்தில் வாசம் செய்கிறதினாலே சந்தோஷம்.

தேவபிள்ளைகளே, நீங்கள் இரட்சிக்கப்பட்டால் சந்தோஷப்படுவதற்கு இன்னும் அதிகமான காரியங்கள் உண்டு. உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுகின்றன. நீங்கள் தேவனை “அப்பா, பிதாவே” என்று அழைக்கக்கூடிய புத்திர சுவிகார ஆவியைப் பெறுகிறீர்கள். கிறிஸ்துவின் அன்பின் குடும்பத்திற்குள் அவருடைய எல்லா சுதந்திரங்களையும் பெற்றுக் கொள்ள உரிமையாளராகி விடுகிறீர்கள்.

நினைவிற்கு:- “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்” (ஏசா. 35:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.