No products in the cart.
Jan 03,2021- வீட்டாருக்கும் சந்தோஷம்!
“இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே” (லூக். 19:9).
ஒருவன் இரட்சிக்கப்படும்போது ஏற்படும் சந்தோஷம் அவனுக்கு மாத்திரமல்ல, அவனுடைய முழு குடும்பத்திற்கும் உரியதாகும். ஒரு குடும்பத்தில் ஒருவர் இரட்சிக்கப்பட்டிருந்தால் அவர் நிமித்தம் முழு குடும்பமும் இரட்சிப்படையும் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம் அல்லவா? (அப். 16:31).
“எங்களுடைய அப்பா பயங்கர குடிகாரராய் இருந்தார். வீட்டிலுள்ள எல்லா பொருட்களையும் கொண்டுபோய் விற்று விடுவார். இப்பொழுதோ எங்கள் தகப்பனார் இரட்சிக்கப்பட்டுவிட்டார். எங்களுடைய முழு குடும்பமும் குட்டி பரலோகம் போல காட்சியளிக்கிறது” என்று அநேகர் சாட்சி சொல்லுவதுண்டு. ஆம், ஒரு பாவி மனம் திரும்பி கர்த்தருடைய பிள்ளையாகும்போது, அந்த வீட்டாருக்கும் மகிழ்ச்சி உண்டாகிறது. காரணம், பாவியை நீதிமானாக்குகிற கர்த்தர் அந்த குடும்பத்தில் சந்தோஷத்தை நிலவப் பண்ணுகிறார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு அல்லவா? (சங். 118:15).
சகேயுவின் மனம்திரும்புதலைக் குறித்து லூக்கா 19-ம் அதிகாரத்தில் நீங்கள் வாசிக்கலாம். “சகேயுவே நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்று இயேசு சொன்னபோது, சகேயுவின் உள்ளம் மகிழ்ந்து துள்ளிற்று. வேதம் சொல்லுகிறது, “அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்” (லூக். 19:6). தங்க வேண்டுமென்று சொல்லும்போதே அவ்வளவு சந்தோஷம் இருக்குமென்றால், இயேசு அந்த வீட்டில் தங்கியிருந்தபோது இன்னும் அதிகமான சந்தோஷம் நிச்சயமாகவே இருந்திருக்கும். இயேசு உங்களுடைய உள்ளத்தில் என்றென்றைக்கும் தங்கியிருப்பது இன்னும் அதிகமான சந்தோஷத்தை வரவழைக்கிறது அல்லவா?
சகேயுவின் சந்தோஷம், இயேசு தனது வீட்டில் தங்கியிருந்ததினால் வந்த சந்தோஷம். அவர் இயேசுவோடு நடக்கும்போது, தன்னுடைய பாவத்தைக் குறித்து மனஸ்தாபத்தோடு கர்த்தரிடத்தில் அறிக்கை செய்தார். ‘நான் யாரிடத்திலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன். ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்’ என்றெல்லாம் மனம் திறந்து பேசினார். சந்தோஷத்தை பெறுவதற்காக எந்த தியாகத்தையும் செய்ய சகேயு ஆயத்தமாயிருந்தார்.
இயேசு அதைக்கேட்டு மனம் மகிழ்ந்து, “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” என்று சந்தோஷத்தோடு கூறினார். அந்த சந்தோஷம் சகேயுவுக்கு மாத்திரமல்ல, சகேயுவினுடைய வீட்டாருக்கும் உரியது. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும் வந்த மனுஷகுமாரன், அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை சகேயுவினுடைய வீட்டிலுள்ள சிறியவர், பெரியவர் எல்லாருக்கும் கொடுத்தார். முழு குடும்பமும் மகிழ்ந்து களிகூர்ந்தது. தேவபிள்ளைகளே, இரட்சிப்பினாலே முதலாவது, தனி மனிதனுக்கு மகிழ்ச்சியுண்டு. இரண்டாவது, குடும்பத்துக்கு மகிழ்ச்சியுண்டு. மூன்றாவது, முழு பரலோகத்திற்கும் மகிழ்ச்சியுண்டு.
நினைவிற்கு:- “கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்” (லூக். 15:23,24).