No products in the cart.
Jan 01, 2021 – சந்தோஷமான புத்தாண்டு!
“என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான்15:11).
இந்தப் புத்தாண்டில் கர்த்தர் இரண்டு காரியங்களை உங்களுக்கு வாக்குப் பண்ணுகிறார். முதலாவது, தம்முடைய சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். இரண்டாவது, உங்களுடைய சந்தோஷம் நிறைவாய் இருக்கும் என்று வாக்களிக்கிறார். கர்த்தருடைய சந்தோஷமும், உங்களுடைய சந்தோஷமும் பெருகுவதும், நிலைத்திருப்பதும், நிறைவாயிருப்பதும் எத்தனை பாக்கியம்!
இயேசு “என்னுடைய சந்தோஷம்” என்று சொல்லுகிறாரே. அவருடைய சந்தோஷம் என்ன? முதலாவது, அவருடைய சந்தோஷம் பிதாவினுடைய சித்தத்தின்படி செய்வதிலே இருந்தது. ஆகவேதான் தனது பன்னிரண்டாவது வயதிலே தன் தாயாகிய மரியாளைப் பார்த்து “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா” (லூக். 2:49) என்று கேட்டார்.
“பிதா, பிதா” என்பதே அவருடைய மூச்சாயிருந்தது. பிதாவின் சித்தத்தை செய்வதே அவருடைய போஜனமாய் இருந்தது. ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்பதே அவருடைய கடைசி வார்த்தையாயிருந்தது. தேவபிள்ளைகளே, நீங்களும் எல்லாவற்றையும் பிதாவின் சித்தத்தின்படி செய்யும்போது, உலகத்தின் முடிவுபரியந்தமும், கிறிஸ்துவின் சந்தோஷத்தில் நிலைத்திருப்பீர்கள்.
இரண்டாவதாக, பிதாவை எப்பொழுதும் மகிமைப்படுத்துவது இயேசுவின் சந்தோஷமாயிருந்தது. இயேசு சொன்னார், “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்” (யோவான் 17:4). எப்போதும் தேவனை மகிமைப்படுத்துவதும், கனப்படுத்துவதும், அவரைத் துதிப்பதும் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய சந்தோஷத்தைக் கொண்டு வரும். எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் கர்த்தரை மகிமைப்படுத்தி, மேன்மைப்படுத்தினால் உங்களுடைய சந்தோஷம் பெரிதாயிருக்கும்.
மூன்றாவதாக, இயேசுவின் சந்தோஷம் என்ன? பிதாவின் வெளிப்பாடுகளில் எல்லாம் அவர் மகிழ்ந்து களிகூர்ந்தார். வேதம் சொல்லுகிறது “அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்றார்” (லூக். 10:21). கர்த்தர் உங்களுக்கு சிறு சிறு நன்மைகள் செய்தாலும், வேதத்திலுள்ள வெளிப்பாடுகளைக் கொடுத்தாலும், நீங்கள் சந்தோஷத்தோடு கர்த்தரில் களிகூரவேண்டும்.
நான்காவதாக, இயேசுகிறிஸ்துவின் சந்தோஷமானது, அவர் மற்றவர்களுக்கு தாராளமாய் கொடுப்பதில் அடங்கியிருந்தது. சுகவீனருக்குக் சுகத்தையும், கட்டுண்டவர்களுக்கு விடுதலையையும், கண்ணீரில் வாழுகிறவர்களுக்கு ஆறுதலையும் கொடுத்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவீர்களென்றால், பல மடங்கு திரும்பப் பெற்றுக்கொள்ளுவதுடன், சந்தோஷமும் அடைவீர்கள்.
நினைவிற்கு:- “…உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (லூக். 10:20).