No products in the cart.
Jan 02, 2021 – சந்தோஷமாய் இருங்கள்!
“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலி. 4:4).
கிறிஸ்தவ வாழ்க்கையே ஒரு சந்தோஷமான வாழ்க்கை. நீங்கள், தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதில் சந்தோஷம். தேவனோடு நடப்பதில் சந்தோஷம். தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதில் சந்தோஷம்! இந்த சந்தோஷத்தை உங்களைவிட்டு யாராலும் பிரித்து விட முடியாது.
பல நெருக்கங்கள், ஒடுக்கங்கள் மத்தியிலே, தானும் சந்தோஷமாக இருந்து கொண்டு, மற்றவர்களையும் சந்தோஷமாய் வைக்கும்படி அப். பவுல், ரோமாபுரியிலுள்ள சிறைச்சாலையிலிருந்து எழுதுகிறார்.
உங்களுக்கு ஜெபத்தில் ஒரு சந்தோஷமுண்டு; ஜெப நேரத்தில் கர்த்தருடைய பொன் முகத்தைப் பார்க்கிறீர்கள். உங்கள் உள்ளம் மலர்ச்சியடைகிறது. கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல, ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர் என்பதை அறியும்போது உங்களுக்கு மகிழ்ச்சி. ஜெபத்திலே அவரை “அப்பா பிதாவே” என்று அழைக்கும்போது ஒரு பூரிப்பு.
ஒரு தேசத்தில் ஒரு பக்தனை மிகவும் அதிகமாய் சித்திரவதை செய்தார்கள். அவரை நாற்றம் பிடித்த ஒரு பெரிய தொட்டிக்குள் பல மாதங்கள் போட்டு வைத்தார்கள். ஆனால், அவரோ அந்த இடத்திலும் கர்த்தரை துதித்து, போற்றி, பாடி, புகழ்ந்து கொண்டிருந்தார். அவர் மகிழ்ச்சியோடு,” “என் உள்ளத்தை பரலோகத்தோடு இணைத்திருக்கிறேன். தேவ தூதர்களின் சத்தம் என் ஆத்துமாவில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது” என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, எந்தச் சூழ்நிலையிலும் ஜெபிக்க மறந்துவிடாதேயுங்கள். உங்கள் சந்தோஷத்தைக் கெடுக்கக்கூடிய சோதனைகள் பல வரக்கூடும். சோதனைக்குட்படாதபடி நீங்கள் விழித்திருந்து ஜெபியுங்கள்
கர்த்தருடைய பிள்ளைகளின் அடுத்த சந்தோஷம் என்ன? கிறிஸ்துவை அறிவிப்பதிலே சந்தோஷம். மற்றவர்கள் அறிவிப்பதை அறிந்து சந்தோஷம். அப். பவுல் எழுதுகிறார்: “…கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்” (பிலி. 1:18).
அப். பவுல் தன் வாழ்நாளெல்லாம் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை அறிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டபோதும், சுவிசேஷம் அறிவிப்பதை அவர் நிறுத்தவில்லை. அங்கே அவரை சந்திக்க வந்தவர்களுக்கெல்லாம் சுவிசேஷத்தை அறிவித்தார். சிறைச்சாலையிலிருந்து கொண்டே பல நிருபங்களை எழுதி, அவை மூலமாய் பல சபைகளுக்கு தேவனுடைய வார்த்தையை அறிவித்தார்.
அப். பவுலின் அடுத்த சந்தோஷமென்ன தெரியுமா? அவர் எழுதுகிறார். “உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன். இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்” (பிலி. 2:17,18). தேவபிள்ளைகளே, உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவின் பணியில் வார்க்கப்படுவது நித்தியமான பேரின்பத்தை தரும்.
நினைவிற்கு:- “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:14).