No products in the cart.
Dec 30 – வேதத்தின்மேல் சந்தோஷம்!
“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்” (சங். 119:92).
சமீபத்தில் ஒரு வாசகர் தான் நடந்து வந்த துயரமான பாதையில் தான் அனுபவித்த சம்பவங்களை வரிசையாய் எழுதியிருந்தார். அவருக்கு ஏற்பட்ட நோய், குடும்பத்தில் வந்த வறுமை, இனத்தவர்கள் செய்த துரோகங்கள், நெருங்கினவர்களின் மரணம், இன்னும் பல பல கஷ்ட நஷ்டங்களை எழுதிவிட்டு கடைசியில் குறிப்பிட்டிருந்தார்: “வேதம் மட்டும் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் நான் என் துக்கத்திலே மூழ்கிப்போயிருந்திருப்பேன்.” ஆம், வேதப் புத்தகம் கர்த்தருடைய வார்த்தையினால் உங்களை ஆறுதல்படுத்துகிறது; காயங்கட்டுகிறது; புது வாழ்க்கையை மலரச் செய்கிறது.
வேதத்தை ஆவலோடு திறக்கும்போது, இதுவரை உலகத்தில் வாழ்ந்த மேன்மையான பக்தர்களோடு நீங்கள் நேரடித் தொடர்பு கொள்ளுகிறீர்கள். ஆபிரகாமின் விசுவாசம் உங்களை பிரமிக்கச் செய்கிறது. ஏனோக்கைப்போல நீங்களும் தேவனோடுகூட சரிசமானமா நண்பனைப்போல் நடக்க முடியும் என்று முயற்சிக்கிறீர்கள். மோசேயைப் பார்க்கும்போது, ‘ஆண்டவரே அவருடைய தாழ்மையை, சாந்த குணத்தை எனக்குத் தாரும்’ என்று மன்றாடுகிறீர்கள்.
யோபுவுக்குத்தான் எவ்வளவு பொறுமை! தாவீது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நின்று மகிழ்ச்சியோடு பாடி நடனம் ஆடி கர்த்தரைத் துதிப்பது ஏதோ இப்பொழுதுதான் நடக்கிறது போல கண்களுக்குத் தெரிகின்றது. ஏசாயா எவ்வளவாய் கர்த்தரோடு பொருந்தி உன்னதமான தேவனுக்குத் தீர்க்கதரிசியாய் இருந்தார்! அவரது வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலானவை! “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது” (சங்.19:8).
எரேமியா தீர்க்கதரிசியின் அனுபவம் என்ன? “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரேமி. 15:16). கர்த்தருடைய வார்த்தைகளில் சந்தோஷம் ஏற்படுவதற்கு காரணம், அதிலே இருக்கிற ஆவியும் ஜீவனும்தான். அந்த ஆவியும் ஜீவனும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்றன. சங்கீதக்காரன், “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது” (சங். 19:7) என்று எழுதுகிறார்.
தேவபிள்ளைகளே, வேதத்தை வாசிப்பதுடன், அதை தியானித்தும் மகிழுங்கள். ஆடும், மாடும் புல் மேய்கின்றன. பார்ப்பதற்கு அவை அவசர அவசரமாக மேய்வது போலிருந்தாலும், பிறகு தனியாக ஒரு இடத்திற்குப் போய் தான் மேய்ந்த புல்லை மீண்டும் அசைப்போடுகின்றன. அப்பொழுதுதான் அந்த உணவு அவைகளுக்கு பெலனாய் மாறும்.
தாவீது சொல்லுகிறார், “நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்” (சங். 104:34). தியானிக்க தியானிக்க அது அவருக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது. “மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்” என்று அவர் சொல்லுகிறார் (சங். 119:162).
நினைவிற்கு:- “கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்” (சங். 92:4).