AppamAppam - Tamil

Dec 24 – புதிய வெளிச்சம்!

“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத். 5:14).

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். அதே நேரத்தில் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாய் வாழுகிறவர்கள், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள். உப்பு சுவையைக் கொடுப்பதுபோல சுவையைக் கொடுக்கிறார்கள். விளக்கு வெளிச்சம் கொடுப்பதுபோல வெளிச்சம் கொடுக்கிறார்கள். ஆம், நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்கள்.

மோசேயினுடைய வாழ்க்கையில் கர்த்தர் குறுக்கிட்டார். கர்த்தர் அவரைச் சந்தித்தபோது மோசேயினுடைய நிலைமை என்ன? அவர் வாக்குவல்லவரல்லாதவராகவும், திக்குவாயும் மந்தநாவும் உள்ளவராகவும் இருந்தார் (யாத். 4:10). ஒருவேளை கர்த்தர் அவரைச் சந்திக்காமலிருந்திருந்தால் அப்படியே திக்குவாயும் மந்த நாவும் உள்ளவராய் யாருக்கும் பிரயோஜனமில்லாதவராய், மாமனாரின் ஆட்டை மேய்த்தபடி அப்படியே தன்னுடைய வாழ்க்கையை முடித்திருந்திருப்பார்.

ஆனால் கர்த்தர் சந்தித்தபோதோ அவர் புதுச் சிருஷ்டியானார். புது வல்லமையையும் சத்துவத்தையும் பெற்றார். மோசேயின் கையிலிருந்த கோல் கர்த்தருடைய கோலாக மாறிற்று. ஆடுகளை வழிநடத்தின அவர் இஸ்ரவேலின் கன்மலையும், மேய்ப்பனுமானார். கிறிஸ்துவுக்குள் அவர் புதுச் சிருஷ்டியாய் மாறினதினாலே பார்வோனுக்கு முன்பாக தைரியமாய் அற்புதங்களை நிகழ்த்தினார். இன்றைக்கும் வேதத்தில் அவருக்கு நீங்காத இடம் உண்டு.

வேதம் முழுவதிலும் இப்படி நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். லாசருவினுடைய வாழ்க்கையை வாசித்துப் பாருங்கள். அவன் வியாதிப்பட்டு மரித்துப் போனான். அடக்கமும் செய்துவிட்டார்கள். நான்கு நாட்கள் ஓடிவிட்டன. கல்லறைக்குள்ளே நான்கு நாட்கள் இருக்கிற மனித உடலின் நிலைமை என்ன? அப்பொழுதுதான் கொடிய துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். சரீரம் அழுகி தண்ணீரைப்போல ஊற்ற ஆரம்பிக்கும். முகமே அடையாளம் கண்டுகொள்ளக்கூடாத அளவு சிதைந்துபோகும்.

ஆனால் இயேசு சொன்ன ஒரு வார்த்தை லாசருவை புதுச் சிருஷ்டியாய் மாற்றிற்று. அவர் என்ன சொன்னார்? ‘லாசருவே வெளியே வா’ என்று சொன்னார். ஒரே வினாடிப் பொழுதில் எல்லாம் புதிதாயிற்று. லாசரு ஜீவனுள்ள சாட்சியாய் மாறிவிட்டார். வேதம் சொல்லுகிறது, “யூதரில் திரளான ஜனங்கள்… இயேசுவினிமித்தமாக மாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்” (யோவான் 12:9,10).

புது சிருஷ்டியாக மாற்றப்படும் அனுபவமானது, அநேக ஜனங்களை கர்த்தரண்டை ஈர்த்து இழுக்க வைக்கிறது. தேவபிள்ளைகளே, உங்கள் மூலம் கர்த்தர் வெளிப்படுவதற்காகவே உங்களை அவர் புது சிருஷ்டியாக மாற்றியிருக்கிறார் என்பதை மறந்து போகாதேயுங்கள்.

நினைவிற்கு:- “காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாக்கு மதுரமாயிருக்கிறது” (உன். 2:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.