AppamAppam - Tamil

Dec 16 – ராஜ்யங்களை ஜெயித்தார்கள்!

“விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள்” (எபி. 11:33).

விசுவாசம் என்பது உங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஒரு வல்லமையான சக்தி. தேவ பெலத்தோடு அதைச் செயல்படுத்தும்போது, அது உங்களை ஜெயங்கொண்டவர்களாய் மாற்றுகிறது. நீங்கள் உலகத்தை ஜெயிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துபோக வேண்டாம். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவா. 5:4).

கானான் தேசம் இஸ்ரவேலருக்கு முன்பாக இருந்தது. அதை சுதந்தரிப்பது எப்படி, அங்கிருந்த முப்பத்தியொரு ராஜ்யங்களையும், ஏழு ஜாதிகளையும் வெல்லுவது எப்படி என்பவையே அவர்கள் முன்னிருந்த கேள்விகள். இஸ்ரவேலர் யுத்த பயிற்சியுடையவர்களல்ல. அவர்கள் எகிப்திலே அடிமைகளாய் ஒடுங்கிப்போய் கிடந்தவர்கள். அவர்களிடம் யுத்த ஆயுதங்கள் ஒன்றுமில்லை. தற்பாதுகாப்பு கவசங்கள், குதிரைப்படை, யானைப்படை மற்றும் இரதங்களினால் இயங்கும் வேகமான படை என ஒன்றுமே அவர்களிடத்திலில்லை.

அவர்களுக்கு இருந்ததெல்லாம் விசுவாசம் ஒன்றுதான். ஆம், ‘இந்த கானானைக் கர்த்தர் எங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார். அதை நிச்சயமாக தருவார்’ என்கிற விசுவாசம். கால் மிதிக்கும் இடத்தையெல்லாம் சொந்தமாக தருவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறாரே. ஆகவே நிச்சயமாகவே தருவார் என்கிற விசுவாசம். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறாரே, அவர் சொல் தவறமாட்டார் என்கிற விசுவாசம். ஆகவே அவர்கள் விசுவாசத்தினால் முன்னேறிச் சென்றார்கள். யோர்தான் பின்னிட்டு திரும்பி வழி விட்டது.

எரிகோவின் பெரிய மதில்கள் நொறுங்கி விழுந்தது. விசுவாசத்தினாலே அவர்கள் ஆயி பட்டணத்திற்குள் புகுந்து பன்னீராயிரம் பேரை வெட்டி வீழ்த்தி வெற்றிச் சிறந்தார்கள். எருசலேமை ஆண்டுகொண்டிருந்த அதோனிசேதேக்கை முறியடித்தார்கள். எபிரோனை ஆண்ட ராஜாவாகிய ஓகாமைப் பின்னிட்டு ஓடப் பண்ணினார்கள். யர்மூத்தின் ராஜாவாகிய பீராமை முறியடித்தார்கள். லாகீசின் ராஜாவாகிய யப்பியா, எக்லோனின் ராஜாவாகிய தெபீர் ஆகியோரும் யுத்தத்தில் இவர்களிடம் தோற்றுப்போனார்கள்.

விசுவாசத்தினாலே இஸ்ரவேலர் ராஜ்யங்களை ஜெயித்தார்கள். ‘எங்கள் கர்த்தர் எங்கள் ஜெயக்கெம்பீரமானவர். எங்கள் சேனைகளுக்கு முன்பாக நடந்து செல்கிறவர். எங்கள் கர்த்தரை எதிர்த்து யாராலும் நிற்க முடியாது. நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தில் வருகிறோம். எங்களுக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்’ என்னும் விசுவாசமே அவர்களுக்கு ஜெயத்தை தந்தது.

புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய உங்கள் யுத்தம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல. வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு இருக்கிறது. நீங்கள் உலகம், மாமிசம், பிசாசோடு போராடி ஜெயங்கொண்டால்தான் பரம கானானாகிய பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியும். தேவபிள்ளைகளே, நீங்கள் விசுவாசத்தினாலே அந்தகார வல்லமையை முறியடித்து ஜெயம் பெறுவீர்களாக! ஜெயமோ கர்த்தரால் வரும்.

நினைவிற்கு:- “…எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்” (எபே. 6:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.