AppamAppam - Tamil

Dec 14 -விசுவாசத்தினாலே யாக்கோபு!

“விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரண காலத்தில்… தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுது கொண்டான்” (எபி. 11:21).

விசுவாச வீரனாகிய யாக்கோபின் முழு வாழ்க்கையையும் அப். பவுல் ஒரே வசனத்தில் சுருக்கி, ‘அவர் தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுது கொண்டார்’ என்று குறிப்பிடுகிறார். வாலிபத்தில் கர்த்தரோடு போராடினவர், வயதான காலத்தில் போராடாமல் தன் விசுவாசத்தில் சாந்துகொண்டு கர்த்தரைப் பணிந்து தொழுதுகொண்டார். ஆம், ஜெபம் போராட அழைக்கிறது. ஆனால் விசுவாசமோ கர்த்தரைச் சார்ந்துகொள்ளுகிறது. வனாந்தரமான இந்த உலகத்தில், கவலைகளும், கண்ணீரும் நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் கர்த்தர்பேரில் சார்ந்து கொள்ள உபயோகப்படும் கோல் விசுவாசம் அல்லவா?

காலங்கள் கடந்து செல்லுகிறது. வயதாகிறது. நீங்கள் யார் மேல் சார்ந்து கொள்ளக்கூடும்? உங்கள் ஆஸ்திகளின் மேலா? பிள்ளைகளின் பேரிலா? அல்லது இனத்தவர்கள் பேரிலா? யாராலும் உங்களை நித்தியம் வரை கொண்டு செல்ல முடியாது. ஆகவே கர்த்தர்பேரிலே விசுவாசத்தோடு சார்ந்து கொள்ளுங்கள்.

உன்னதப்பாட்டில் ஒரு அருமையான வசனம் வருகிறது. “தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?” (உன். 8:5). ஆம், அவள்தான் விசுவாசமுள்ள மணவாட்டி. தன்மேல் சார்ந்துகொள்ளுகிறவர்களை அவருடைய நேசக்கரம் அரவணைத்து அன்பா வழி நடத்திச் சேல்லுகிறது. யாக்கோபு தன் மரண காலத்தில் தன் பிள்ளைகள்மேல் சாரவில்லை. விசுவாசத்தினாலே கோலின் முனையிலே சார்ந்து கொண்டார்.

நம்முடைய முற்பிதாக்களின் சரித்திரத்தை நீங்கள் பார்த்தால் அவர்கள் எல்லாரும் மேய்ப்பர்களாய் இருந்தார்கள் என்பதை அறியலாம். அவர்களுடைய கைகளிலே கோல் இருந்தது. கோலும் தடியும் அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கும் கருவிகளாய் காட்சியளித்தன. கோலைக்கொண்டு மரங்களின் கொப்புகளை வளைத்து ஆடுகளுக்கு இலைகளை உணவாக கொடுத்தார்கள். தடியைக் கொண்டு சிங்கம், புலி, கரடி போன்ற சத்துருக்களை அடித்து விரட்டினார்கள்.

தாவீது தன் கையிலிருந்த கோலையும், தடியையும் குறித்து பேசாமல் கர்த்தரைப் பார்த்து ‘உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்’ என்று சொல்லுகிறார். கர்த்தருடைய கோலின் மேலேயே அவர் சார்ந்துகொண்டார். அந்த கோல் தன்னை வழிநடத்துகிற அன்பின் கோலாக இருக்கிறது என்பதை உணர்ந்ததினாலே விசுவாசத்தோடு அதன்மேல் சார்ந்தார்.

 ‘கோல்’ என்பது கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள்தான். விசுவாசத்தினாலே இந்த வாக்குத்தத்தங்களை ஏற்றுச் செயல்படுத்துகிறீர்கள். அந்த கோலிலே சார்ந்துகொள்ளும்போது அது உங்களை உற்சாகப்படுத்துகிறது. உங்களை நல்வழியில் நடத்துகிறது. உங்களுடைய கலக்கங்களையெல்லாம் மாற்றி ஆறுதலையும் தேறுதலையும் கொண்டு வருகிறது.

தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தர்பேரில் வைக்கிற விசுவாசத்தில் சார்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியினால் உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து அவரைச் சார்ந்துக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது” (சங். 119:50).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.