AppamAppam - Tamil

Dec 11 – விசுவாசத்தினாலே ஆபேல்!

“விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்” (எபி. 11:4).

 பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களில், விசுவாச வீரர்களில் ஒருவராக ஆபேல் திகழுகிறார். எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் இடம் பெற்றிருக்கிற விசுவாச வீரர்களின் பட்டியலில் ஆபேலுக்கு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது. ஆபேலின் விசுவாசத்தை நீங்கள் பின்பற்றும்போது நிச்சயமாகவே தேவனுக்கு பிரியமானவர்களாய் நடந்து கொள்ளுகிறவர்களாயிருப்பீர்கள்.

 ஆபேல் என்ற பெயருக்கு சுவாசம் என்பது அர்த்தமாகும். சுவாசத்திற்கு முன்பாக ‘வி’ என்ற எழுத்தை சேர்த்தால் சுவாசம் விசுவாசமாகிறது. உங்களுடைய சுவாசமே விசுவாசமாய் மாறிவிட்டால் எத்தனை ஆசீர்வாதமாக இருக்கும்! ஆபேலின் விசுவாசம் அவனை நீதிமானாக்கியது. முதல் இரத்த சாட்சியும் இந்த ஆபேல்தான் (லூக். 11:50). முதல் நீதிமானும் இந்த ஆபேல்தான் (மத். 23:35). முதல் விசுவாச வீரனும் இந்த ஆபேல்தான் (எபி. 11:4).

 ஆபேலின் விசுவாசம் ஆச்சரியமான ஒன்றாகும். கர்த்தருக்குப் பலி செலுத்த விரும்பின ஆபேல், ஏதோ ஒரு பலியை செலுத்த வேண்டுமென்று எண்ணாமல் தேவனுக்குப் பிரியமான பலியைச் செலுத்த விரும்பினார். பிரியமான பலி எது என்பதை எப்படி அறிந்துகொள்வது? ஆகவே விசுவாசத்தினாலே தன் இருதயத்தை கர்த்தருடைய உள்ளத்தோடு இணைத்துக் கர்த்தருக்குப் பிரியமான காணிக்கை எதுவாயிருக்கும் என்பதை தியானித்தார்.

அந்த விசுவாசத்தினாலே, மேசியா பூமிக்கு ஆட்டுக்குட்டியாக பலியாக வருவார் என்பதை அறிந்து கொண்டதினாலே, அதற்கு முன்னடையாளமாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து பலிபீடத்தில் சமர்ப்பித்தார். ஆகவே அந்த பலி கர்த்தருக்குப் பிரியமான பலியாகவும், மேன்மையான பலியாகவும் விளங்கியது. விசுவாசத்தினாலே ஆபேல் அந்த பலியை செலுத்தினார் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது.

காயீனுக்கு விசுவாசமில்லை. தேவனுக்குப் பிரியமானது இன்னதென்று கண்டுகொள்ளும் உள்ளமுமில்லாமல், காகறிகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்தபோது, கர்த்தர் அதை அங்கீகரிக்கவில்லை. நீங்கள் தேவனோடு நடக்கப் பழகும்போது, சிறு காரியங்களைச் செய்தாலும் கர்த்தர் அதில் சந்தோஷப்படுவாரா அல்லது துக்கப்படுவாரா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஆபேல், அந்த விசுவாசத்தினாலே தேவனுக்குப் பிரியமான பலி இன்னதென்று அறிந்து அதை செலுத்தினார். இன்று நீங்கள் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல வேத வசனங்களின் மூலமாகவும், கர்த்தருக்குப் பிரியமான பலி இன்னதென்று அறிந்துகொள்ள முடியும். அவருக்குப் பிரியமான பலி என்ன? “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோமர் 12:1).

நினைவிற்கு:- “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங். 51:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.