No products in the cart.
Dec 8 – விசுவாசிக்கும்!
“அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்” (1 கொரி. 13:7).
அன்பு கள்ளங்கபடற்றதாகையால் ஒவ்வொன்றையும் அப்படியே நம்பி விசுவாசிக்கும்; அதற்காக அன்பு ஒரு ஏமாளி என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ஏனெனில் முடிவில் அன்பே ஜெயம் பெறும்.
ஒரு சகோதரி தன் கணவன் மேல் அளவில்லாத அன்பை வைத்திருந்தார்கள். ஆனால் அவரோ, அவருக்குக் கீழே வேலை செய்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணோடு ரகசியத் தொடர்பு வைத்திருந்தார். அவளை அழைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுவார். மனைவியிடம் தான் அலுவலக காரியமாக செல்லுவதாக கூறுவார். அவர்களும் கணவர் மேல் மிகுந்த அன்பு வைத்தபடியால் அவரை அப்படியே நம்பி, அவருக்கு பணிவிடை செய்து அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் ஒரு நாள் ஜெப நேரத்தில் கர்த்தர் அந்த கணவனுடைய உண்மை நிலையை அவருக்கு வெளிப்படுத்தினார். அந்த சகோதரியினுடைய உள்ளம் சுக்கு நூறாக உடைந்தபோதிலும் அதை தாங்கிக்கொண்டார்கள். தன் கணவனிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், முன்பு போலவே அன்புடன் பழகினார்கள். ஆனால் கர்த்தருடைய பாதத்தை மட்டும் விடாமல் பற்றிக்கொண்டு ஊக்கமாக ஜெபித்து வந்தார்கள்.
நித்திரையிலிருந்து விழிப்பதுபோல ஒரு நாள் அந்த மனிதர் மனம் திரும்பினார். கர்த்தர் பில்லி சூனியக் கட்டுகளனைத்தையும் உடைத்தார். கணவனோடு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்கு திருமணமாகி வேறு இடத்துக்கு மாறிச் சென்றாள். தனக்காக யாவையும் செய்து முடித்த தேவனை மனதார நேசித்து அன்பு கூர்ந்தார்கள். ஆம், அன்பு நம்ப வைக்கும். அதே நேரத்தில் ஜெயமும் பெறும்!
வேதம் சொல்லுகிறது, “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும்… ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” (எபி. 6:19). நீங்கள் அன்புகூர்ந்து விசுவாசியுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்வார். கர்த்தர் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீணாவதில்லை.
“ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்” என்பது கர்த்தருடைய கட்டளை. அவர் விதித்த மிக முக்கியமான கற்பனை மட்டுமல்ல, அது உங்களை அன்புகூர வேண்டிய கடனாளிகளாகவும் மாற்றுகிறது (ரோம. 13:8). நீங்கள் கடனாளிகள்தான். ஆனால் பணம் வாங்கி திரும்பச் செலுத்தும் கடனாளிகளல்ல. பொருட்களை கடனாக வாங்கி திரும்பக் கொடுக்கும் கடனாளிகளல்ல; அன்புகூர கடனாளிகள். தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் கடனாளிகள்.
எப்படி நீங்கள் அன்புக் கடனாளிகளாகிறீர்கள்? மற்றவர்கள் ஏற்கெனவே அன்பு செலுத்திவிட்டதினாலல்ல; ஒருவேளை அப்படி உங்கள்மேல் அன்பு செலுத்த தவறியிருந்தாலும்கூட, நீங்கள் அன்புக் கடனாளிகளாகவே இருக்கிறீர்கள். காரணம், கிறிஸ்து உங்கள்மேல் அன்புகூர்ந்து உங்களை அவருக்கும், மற்றவர்களுக்கும்கூட அன்புக் கடனாளிகளாக்கிவிட்டார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை புறக்கணித்தபோதும், அசட்டை செய்தபோதும், அவருக்கு விரோதமாய் நடந்துகொண்ட போதும்கூட அவர் உங்களிடம் அன்பாகவே இருந்ததுபோல, நீங்களும் அன்பாய் இருங்கள்.
நினைவிற்கு:- “சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (2 தெச. 1:3).