AppamAppam - Tamil

Dec 5 – சுகவாழ்வு!

“அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்” (ஏசாயா 58:8).

உங்கள் சுகவாழ்வு துளிர்க்கும். இழந்துபோன ஆரோக்கியத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுவீர்கள். இழந்துபோன பெலன் திரும்ப உங்களுக்கு வரும். கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்கி உங்கள் சுக வாழ்வைச் செழிக்கச் செய்வார்.

உடைந்திருக்கிற குடும்பங்கள் ஒன்றாய் இணைந்து அங்கே சுகவாழ்வு ஆரம்பிக்கும்போது எத்தனை சந்தோஷம்! தனித்திருக்கிற குடும்பங்கள் கர்த்தரால் இணைக்கப்படும்போது எத்தனை ஆனந்தம்! சரீரத்தின் சுகத்திலும், உள்ளத்தில் ஆனந்தத்திலும், ஆவியிலே களிகூருதலிலும், நிச்சயமாகவே உங்களுடைய சுக வாழ்வு துளிர்க்க வேண்டும்.

சுகவாழ்வு துளிர்ப்பது என்பது எப்படி நிகழும்? கர்த்தர் வேதத்திலே அதற்கு ஒரு நிபந்தனையைக் கொடுக்கிறார். ஆம், நீங்கள் இதைப்பெற நிறைவேற்ற வேண்டிய சில காரியங்கள் நிச்சயமாகவே உண்டு. நீங்கள் அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்த்து, நுகத்தடியின் வளையல்களை நெகிழ்த்தி, நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி, சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போட வேண்டும் (ஏசா. 58:6). கட்டுக்குள்ளாயிருக்கும் ஜனங்களின் கட்டவிழ்த்தலுக்காக நீங்கள் முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆடு, மாடுகளை கட்ட வேண்டுமென்றால் கயிற்றினால் கட்டுவார்கள். ஆனால் ஜனங்களையோ சாத்தான் மூட பழக்க வழக்கங்களினாலும், பாரம்பரியங்களினாலும், அறியாமையினாலும், போதை வஸ்துக்களினாலும் கட்டி வைத்திருக்கிறான். அவர்களை கட்டவிழ்ப்பார் யார்? விடுதலையாக்குவார் யார்?

 ஒரு முறை ஒரு குடிசைப் பகுதியில் திடீரென்று தீ பிடித்துவிட்டது. அந்த இடத்திலே ஒரு பெரிய எருமை மாடு இரும்புச் சங்கிலியினால் மரத்திலே கட்டப்பட்டிருந்தது. தீ பரவும்போது அதைக் கட்டவிழ்க்க அநேகர் முயன்றார்கள். இரும்பு சங்கிலியானதால் அதை உடனே அவிழ்க்க முடியவில்லை. தீ பரவியபோது அந்த மாடு மிகவும் துடிதுடித்து இறந்து போனது. கட்டப்பட்ட மக்கள் நரக அக்கினியிலே எப்படி துடிப்பார்கள் என்பதை எல்லோருக்கும் புரிய வைக்கும் ஒரு நிகழ்வாக அது அமைந்தது.

நீங்கள் உபவாசம் இருந்தாவது ஜனங்களுடைய கட்டுகளை அவிழ்த்தேயாக வேண்டும். இயேசு கிறிஸ்து சீஷர்களைப் பார்த்து,”உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” (மத். 21:1,2) என்றார்.

‘கிராமத்துக்குப் போங்கள்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அங்குள்ள மக்கள் அறியாமைக்குள்ளும், மூட நம்பிக்கைகளுக்குள்ளும், இருளுக்குள்ளும் மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவபிள்ளைகளே, அவர்களை விடுவிக்க முன் வருவீர்களா?

நினைவிற்கு:- “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது” (1 தீமோ. 1:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.