AppamAppam - Tamil

Dec 4 – உகந்த வாசனை!

“கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்” (ஏசா. 11:3).

 தேவபிள்ளைகளாகிய நீங்கள் கிறிஸ்துவுக்கு நற்கந்தங்களாய் விளங்குகிறீர்கள். உங்களிடத்தில் காணப்பட வேண்டிய பல வாசனைகளை வேதம் தெரியப்படுத்துகிறது. அதிலே முக்கியமான வாசனை, ‘கர்த்தருக்குப் பயப்படுதல்’ ஆகும். அதுவே அவருக்கு உகந்த வாசனை என்றும் வேதம் சொல்லுகிறது.

தேவனுக்குப் பயப்படுகிற பயம் உங்களுக்குள்ளே பரிசுத்தத்தைக் கொண்டு வரும். ‘என் ஆண்டவர் என்னைப் பார்க்கிறார் அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. என்னுடைய நினைவுகளைக்கூட தூரத்திலிருந்து அறிகிறவர்’ என்று எந்த மனுஷன் உணர்வடைகிறானோ, அவன் நிச்சயமாகவே பாவத்துக்கும், தீமைக்கும் விலகி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுகிறான்.

யோசேப்பின் வாழ்க்கையிலே தேவனுக்குப் பயப்படுகிற பயம் இருந்தது. அதன் காரணமாகவே அவரது சொந்த எஜமாட்டி அவனை விபச்சாரத்துக்கு அழைத்தபோதுகூட ‘இவ்வளவு பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு நான் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி?’ என்று தைரியமாகக் கேட்டார்.

தேவ பயமே பாவத்துக்கு விலகி ஓடும்படி யோசேப்பை தூண்டியது. அந்த வீட்டில் வேலை போனாலும் பரவாயில்லை. வஸ்திரம் போனாலும் பரவாயில்லை. இதன் நிமித்தம் சிறை தண்டனை அனுபவித்தாலும் பரவாயில்லை என்று ஓடி தன் பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொண்டார். ஆகவேதான், யோசேப்பை கர்த்தர் எகிப்திலே பெரிய அதிகாரியாய் உயர்த்தி கனம் பண்ணினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இன்று அநேகம்பேர் துணிகரமாய் பாவத்திலே விழுவதற்கு காரணம் என்ன? ஒருவரையொருவர் குற்றப்படுத்தி தாக்கி எழுதுவதற்கு காரணம் என்ன? எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கும், வக்கீலிடமும் போய்க் கொண்டிருக்கக் காரணம் என்ன? பொய் சாட்சி சொல்லுவதற்கு காரணம் என்ன? தேவ பயமில்லை என்பதுதான் இவற்றுக்கெல்லாம் காரணம். வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி. 1:7). பாவத்துக்கு விலகுகிற ஒரு ஞானம் உண்டென்றால், அது கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. அதுதான் உண்மையான ஞானம்.

கர்த்தர் அன்புள்ளவர்தான். உங்களை நேசிக்கிற தகப்பன்தான். தாய் தேற்றுகிறதுபோல உங்களைத் தேற்றுகிறவர்தான். அதே நேரத்தில் அவர் மிகவும் கண்டிப்புள்ளவர். நீங்கள் அவருக்குப் பயப்படவேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறவர். ஆகவேதான் சங்கீதக்காரன் ‘பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள். நடுக்கத்துடனே களிகூருங்கள்’ என்றார்.

தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பயப்படுவது அத்தியாவசியமான ஒன்றாகும். நீங்கள் அப்படி பயப்படும்போது, கர்த்தருக்கு உகந்த வாசனையாய் விளங்குவீர்கள். நன்மைகளும், மேன்மைகளும், உயர்வும் உங்களைத் தேடி வந்து அரவணைத்துக் கொள்ளும்.

  நினைவிற்கு:- “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது” (சங். 19:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.