AppamAppam - Tamil

Dec 3 – வருகை சமீபம்!

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்” (மத். 24:44).

கர்த்தருடைய வருகை எவ்வளவு சமீபமாக இருக்கும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோமோ, அதைவிட அவருடைய வருகையானது மிகவும் சமீபமாயிருக்கிறது என்பதை அநேகர் புரிந்துகொள்ளுவதில்லை. எனவேதான் ஜனங்கள் அதிகமான பாவத்திற்குள்ளும், உலக உல்லாசங்களுக்குள்ளும் பரிதபிக்கப்படத்தக்க விதமாய் விழுந்து, அமிழ்ந்து, அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதனுடைய நிலைமையை விளக்க ஒரு வேடிக்கையான சம்பவத்தை சொல்லுவார்கள். ஒரு மனிதனை சிங்கம் ஒன்று துரத்தி வர, அவன் அதற்கு தப்பும்படி பாழும் கிணற்றுக்குள் குதித்தான். நல்ல வேளை அந்த கிணற்றில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு ஆலவிழுதை அவன் இறுகப் பற்றிப் பிடித்ததினால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். மேலே சிங்கம் உறுமிக் கொண்டிருந்தது. கீழே பாழும் கிணற்றின் ஆழத்தில் இரண்டு பயங்கரமான கருநாக பாம்புகள் இவன் எப்பொழுது கீழே விழுவான் கொத்த வேண்டுமென்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தன. இவன் தொங்கிக் கொண்டிருந்த விழுதையோ மேலே ஒரு எலி கொஞ்சம் கொஞ்சமாக கடித்து, அறுந்து போகும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது.

ஆனால் அவனோ அருகிலிருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த தேனை தன் திறந்த வாயினால் சுவைத்துக் கொண்டிருந்தான். தேனின் ருசி அவனுடைய கண்களை மயக்கியிருந்தது. தான் எப்பேர்ப்பட்ட ஆபத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து தேனின் மேலேயே நாட்டம் கொண்டிருந்தான்.

இன்றைய மனிதனின் நிலைமை அதுதான். சிற்றின்பத்தின் மோகத்தில்தான் அவன் நாட்டம் கொண்டிருக்கிறான். நித்தியத்தைக் குறித்தோ, பாதாளம் வாயை ஆ என்று திறந்திருக்கிறதைக் குறித்தோ, நரக கடலைக்குறித்தோ அவனுக்கு சிறிதும் அக்கறையில்லை. கர்த்தருடைய வருகை சமீபமாகிவிட்டது என்கிற உணர்வுமில்லை.

இயேசு சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” (மத். 24:37-39).

ரோம சாம்ராஜ்யம்கூட வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணம், சிற்றின்ப மயக்கம்தான். அந்த சாம்ராஜ்யத்திற்கு சூழ விரோதிகள் இருக்கிறார்கள் என்பதை மறந்து ரோம மக்கள் ஆடம்பரமாய் வாழ்ந்து, புசித்து, குடித்து, வெறித்துக் கொண்டிருந்தார்கள். விளையாட்டுக்களும் கேளிக்கைகளும்தான் அவர்களுடைய நேரப்போக்காக இருந்தது. சன்மார்க்க வாழ்க்கை சீரழிவுக்குள் வந்ததால் பகைவர்கள் அவர்களை எளிதாக மேற்கொண்டார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகைக்காய் ஆயத்தப்படுங்கள். ஜனத்தை ஆயத்தப்படுத்துங்கள். அவசரத்தை உணர்ந்து செயல்படுங்கள்.

நினைவிற்கு:- “இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று” (மத். 25:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

அன்பு தேவபிள்ளைகளே,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அடுத்த வாரம், மே 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பரிசுத்த ஆசீர்வாத உபவாச ஜெபம் நம்முடைய ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயத்தில் ஒழுங்கு செய்து இருக்கின்றோம். அதில் அடியேனும் என்னோடுகூட தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் கர்த்தருடைய வார்த்தையை கொண்டுவர இருக்கின்றோம். நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு இந்த பரிசுத்த ஆசீர்வாத உபவாச ஜெபத்திலே கலந்துக்கொண்டு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம் No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு, கோடம்பாக்கம்.

For Contact-
+919003067777,   +919884908777,   +919884916777