AppamAppam - Tamil

Dec 1 – வற்றாத நீரூற்று!

“நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்” (ஏசா. 58:11).

கர்த்தருடைய ஆசீர்வாதங்களெல்லாம் உங்களுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அவற்றை சுதந்தரித்துக் கொள்ளும்போது அவை ஆம் என்றும், ஆமென் என்றும் விளங்குகின்றன. இன்று கர்த்தர் உங்களைப் பார்த்து, “நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்” என்று சொல்லுகிறார். ஆம், நீங்கள் ஒரு வற்றாத நீரூற்று.

சில ஏரி குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடும். ஆனால் கோடைக் காலம் வரும்போது அவற்றின் தண்ணீர் வற்றிவிடும். ஆனால் நீங்கள் எந்த சூழ்நிலையிலும் வறண்டு போவதில்லை, வற்றிப் போவதில்லை, துவண்டு போவதில்லை. கர்த்தர் உங்களை நீரூற்றுக்கு ஒப்பிடுகிறார். வற்றாத நீரூற்றிலிருந்து வருடம் முழுவதும் இனிமையான தண்ணீர் சுரந்து கொண்டேயிருக்கும். கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒருபோதும் வற்றிப் போவதில்லை. அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற நன்மைகள், கிருபைகள், ஆசீர்வாதங்கள் வற்றிப் போவதேயில்லை.

இந்த நீரூற்றானது குறைவை நிறைவாக்கும் நீரூற்று. ஒரு தீர்க்கதரிசியின் மனைவி வீட்டில் குறைவு ஏற்பட்டது. பணம் இல்லாததால் தேவைகளை சந்திக்க முடியாத குறை. ஆனால் கர்த்தர் அந்த வீட்டிலுள்ள பானையில் நீரூற்றை சுரக்கச் செய்தார். அந்த குடத்திலிருந்து எண்ணெய் சுரந்து வந்துக்கொண்டேயிருந்தது. பாத்திரங்களை நிரப்பிக் கொண்டேயிருந்தது. காலியான பாத்திரங்கள் இருக்கும் வரையிலும் அது வற்றிப் போகவேயில்லை. அந்த பானையில் எண்ணெய் குறையாமல் இருந்தது போல உங்களுக்குள் ஆவியானவரின் அபிஷேகம் இருக்கிறது. அது ஒரு நீரூற்று அல்லவா? இயேசு சொன்னார், “நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” (யோவா. 4:14).

இந்த நீரூற்று தாகம் தீர்க்கிற நீரூற்றாகும். உலகத்தார் தாகத்தினால் நாவறண்டு தவிக்கிறார்கள். ஜீவநீரூற்று எங்கே என்று தேடுகிறார்கள். கர்த்தர் சொல்லுகிறார், “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கினேன்” (ஏசாயா 41:17,18).

 கிறிஸ்து ஒருவர்தான் உங்களுடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்கிறவர். உலக மக்கள் சிற்றின்பங்களையும், பாவங்களையும், பணத்தையும் தாகத்தோடு நாடி ஓடுகிறார்கள். கானல் நீரைத் தேடி ஓடுகிற மான்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள். ஒருநாளும் அவர்கள் திருப்தியடைவதில்லை. ஆனால் கர்த்தரோ உங்களுடைய தாகத்தை தீர்க்கிறது மாத்திரமல்ல, உங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றும்படி உங்களுக்குள்ளிலிருந்து நீரூற்றைப் பொங்கப் பண்ணுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரு நீரூற்றாயிருக்கிறபடியால் கர்த்தரைத் துதிப்பீர்களா?

நினைவிற்கு:- “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதி. 4:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.