AppamAppam - Tamil

Nov 28 – தரிசனம்!

“தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்”(நீதி.29.18).

இந்த தீர்க்கதரிசனம் என்கிற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் “வெளிப்பாடு” என்று இருக்கிறது. நீங்கள் கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால், உங்களுக்குள்ளே ஒரு தரிசனம் காணப்பட வேண்டும். எபிரெய மொழிபெயர்ப்புகளிலே, தரிசனம் என்கிற வார்த்தை, ‘உங்கள் உள்ளத்தினாலே உணர்ந்து, எதிர்காலத்தைக் குறித்து சிந்திக்கிற, ஆற்றல் தெளிவை உண்டு பண்ணுகிற எண்ணம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

தேவபிள்ளைகளே, உங்கள் எதிர்காலத்தைக்குறித்து எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? எந்த ஒரு இலக்கும், எந்த ஒரு தரிசனமுமில்லாமல் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாது. ஏதோ ஒரு நாளில் எல்லாம் கைகூடி வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது.

ஓட்டப் பந்தயத்திலே ஓடுகின்ற ஒரு வீரன் கண்களை வெற்றி இலக்கின்மீது வைத்துக்கொண்டு ஓடுகையில், அதுவே அவனுடைய தரிசனம். உங்களுக்கு ஒரு தெளிவான தரிசனம் இருக்கவேண்டும். அந்த தரிசனத்தை அடைய வேண்டுமானால், இலக்குகளும், திட்டங்களும் உங்களுக்குத் தேவை. எங்கே போகிறோம், எதற்காக போகிறோம், என்ன நடக்க போகிறது என்கிற திட்டம் இல்லாமலிருந்தால் வாழ்க்கை சீர்க்கெட்டுப் போய்விடும். எந்த ஒரு இலக்கையும் நீங்கள் அடைய முடியாது. சிலருக்கு எங்கேயிருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாததினால் குழப்பம் ஏற்படுகிறது. அவர்களுடைய நேரத்தையும், தாலந்துகளையும் வீணாய் செலவழித்து விடுகிறார்கள்.

ஹெலன்கெலர் என்ற ஒரு சகோதரிக்கு கண்களும் தெரியாது, காதுகளும் கேட்காது. ஆனாலும் கர்த்தருக்காக அவர்கள் பெரிய காரியங்களை செய்தார்கள். அவர்களிடம் ஒருவர், கண்கள் குருடாக, காதுகள் கேட்கமுடியாத நிலைமையிலிருக்கிறதை விட மோசமான காரியம் எதாவது இருக்க முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “ஒரு மனுஷன் தரிசனமில்லாமல் வாழ்வானென்றால், அதுதான் அவனுக்கு நேரிடுகிற மிகப்பெரிய மோசமான காரியம். நான் கண்கள் தெரியாதவளாக காதுகள் கேட்காதவளாக இருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு தரிசனமுண்டு. ஒரு இலக்குண்டு. நான் போக வேண்டிய ஒரு திசையுண்டு. அதை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் தேவனுக்கென்று பெரிய காரியங்களை சாதிக்க முடிகிறது” என்றார்களாம்.

நீங்கள் அந்தந்த நாளுக்குரிய வாழ்க்கையை வாழலாம். ஆனால் தரிசனமில்லாமல் வாழக் கூடாது. கர்த்தர் பூமியை சிருஷ்டித்தபோது, பூமிக்கென்று ஒரு தரிசனத்தை வைத்திருந்தார். இந்த பூமி நிறைவடைந்திருக்க வேண்டும். இந்த பூமியிலே ஜீவராசிகள் இருக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தையும், நோக்கத்தையும் வைத்திருந்தார். அவர் தரிசனமுள்ள தேவன்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒரு தரிசனம் கொடுப்பாரென்றால், கர்த்தரோடு இணைந்து செயலாற்றி, அந்த தரிசனத்தை நிறைவேற்றுங்கள். கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கிற இலக்கை நோக்கி நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள்.

நினைவிற்கு:- “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை” (ஏசா. 45:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.