AppamAppam - Tamil

Nov 23 – திவ்விய சுபாவம் – பொறுமை!

“…திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருகிறது” (2 பேதுரு 1:4).

‘நீங்கள் தேவனுடைய திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகும்பொருட்டு’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆம், கர்த்தர் தம்முடைய சுபாவங்களை உங்களுக்குத் தருகிறார். அவருடைய தெய்வீக சுபாவங்களாக பொறுமை, சாந்தம், அன்பு, தயவு, மனதுருக்கம், காருண்யம் ஆகியவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். கிறிஸ்துவின் தெய்வீக சுபாவங்களை நீங்கள் தியானித்து அவற்றை சுதந்தரித்துக் கொள்ளும்போது, அது உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாயிருக்கும்.

பொறுமை என்றாலே உபத்திரவங்களிலே நீங்கள் காண்பிக்க வேண்டிய தெய்வீக சுபாவத்தையே அது குறிக்கிறது. எல்லாம் நன்மையானதாய் இருக்கும்போது நீங்கள் காண்பிக்கிற பொறுமையினால் என்ன பிரயோஜனமுண்டு? அதே நேரம் தடைகளின் மத்தியிலும், உபத்திரவங்களின் மத்தியிலும், பாடுகளின் மத்தியிலும் நீங்கள் காண்பிக்கிற பொறுமை உங்களுக்குள்ளிருக்கிற தெய்வீக சுபாவத்தை வெளிக்கொண்டு வருகிறது.

இயேசுகிறிஸ்துவின் பொறுமையைப் பாருங்கள்! சிலுவையின் பாடுகளின் மத்தியிலே அவர் பொறுமையின் சிகரமாக விளங்கினார். அவரை வாரினால் அடித்தபோதும், முள்முடியைச் சூட்டி கோலினால் தாக்கியபோதும், முகத்தில் காரித்துப்பி அவரைக் கேலியும் பரியாசமும் செய்தபோதும் அவர் எத்தனை பொறுமையுள்ளவராயிருந்தார்! மட்டுமல்ல, அந்த பொறுமையோடுகூட மன்னிக்கிற தெய்வீக சுபாவத்தையும் வெளிப்படுத்தினார். பாவிகளால் அவருக்குச் செய்யப்பட்ட எல்லா விபரீதங்களையும் அவர் சகித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு மீட்புண்டாக்க தம் இரத்தத்தையே ஊற்றிக் கொடுத்தார்.

ஜான் வெஸ்லியின் தாயாருடைய பொறுமையைப் பாருங்கள்! அவர்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தபோதிலும் ஒவ்வொரு பிள்ளையிடமும் பொறுமையை கையாண்டார்கள். ஒரு தடவை அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவர் இருபதுமுறை அவர்களுக்கு கீழ்ப்படியாமல் முரட்டாட்டம் பண்ணியபோதிலும் அவர்களோ அத்தனை முறையும் தெய்வீக பொறுமையோடே விளங்கியதை அவருடைய கணவனார் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு அவர்களைப் பார்த்து, “உன் பொறுமையை மெச்சிக் கொள்ளுகிறேன். அதைப் பார்த்து நான் அதிசயப்படுகிறேன்” என்று சொன்னார்.

உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாவிட்டால் நீங்கள் உடனே எரிச்சலடைவதுண்டு. இன்னும் இரண்டு முறை கீழ்ப்படியாவிட்டால் பிரம்பை, கையில் எடுத்து ஆத்திரம் தீர அடித்து நொறுக்கி விடுவதுண்டு. ஆனால் ஜான் வெஸ்லியின் தாயாரோ, இருபது முறை பிள்ளைகள் கீழ்ப்படியாமல் போனபோதிலும் அவர்கள் பொறுமையைக் கையாண்டு வெற்றிக் கண்டார்கள். இதனால் அவருடைய பிள்ளைகள் பிற்காலத்தில் கர்த்தருடைய ஊழியக்காரர்களாய் சிறந்து விளங்கினார்கள்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் தெய்வீக சுபாவமாகிய பொறுமை உங்களுடைய வாழ்க்கையில் வருவதற்கு ஒப்புக் கொடுப்பீர்களாக.

நினைவிற்கு:- “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (எபே. 4:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.