AppamAppam - Tamil

Nov 19 – கொடுக்கும் உடன்படிக்கை!

“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32).

நம் தேவன் உடன்படிக்கையின் தேவன். ஆதாம் ஏவாளோடு அவர் செய்த உடன்படிக்கையின்படி நமக்காக தமது சொந்தக் குமாரனை கொடுத்தார். தேவ குமாரனாகிய கிறிஸ்துவோ, தம்முடைய இரத்தத்தையும் மாம்சத்தையும் ஜீவனையும் கொடுத்தார். மட்டுமல்ல, உலகம் கொடுக்கவும் எடுக்கவும் கூடாத சமாதானத்தை, இரட்சிப்பை, நித்திய வாசஸ்தலங்களைக் கொடுத்தார். நீங்கள் அவருக்கு கொடுக்கவேண்டியதெல்லாம் உங்களுடைய இருதயம்தான்.

விசுவாச வீரரான டேவிட் லிவிங்ஸ்டன், ஆப்பிரிக்க காடுகளில் ஊழியம் செய்து கொண்டிருக்கையில், ஒரு சமயம் ஆப்பிரிக்க காட்டுவாசிகளின் தலைவனுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டியதிருந்தது. அந்த உடன்படிக்கையின் விதிப்படி ஆப்பிரிக்கத் தலைவன் விரும்பும் லிவிங்ஸ்டனுடைய பொருளை அவனுக்கு கொடுத்து, அவன் கொடுப்பதை இவர் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த காட்டுத் தலைவனோ, லிவிங்ஸ்டன் மிக அன்பாக வளர்த்துவந்த ஆட்டைக் கேட்டபோது, அவர் அதிர்ந்து போனார். எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனது உயிருக்கு உயிராய் மதித்து வளர்த்த ஆட்டைக் கொடுத்து, அவனிடமிருந்த துருபிடித்த ஈட்டியை பதிலுக்கு பெற்றுக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு லிவிங்ஸ்டன் காட்டு வழியில் தனது நண்பர்களுடன் நடந்து சென்றபோது, அவரை சந்தித்த எல்லா காட்டு மக்களும் அவரை பணிவுடன் தலைகுனிந்து வணங்கினார்கள். அதைக்கண்டு லிவிங்ஸ்டன் ஆச்சரியப்பட்டார். அப்போது அந்த ஆப்பிரிக்க நண்பர் சொன்னார், தங்கள் தலைவனின் ஈட்டி உங்களிடம் இருப்பதால் அம்மக்கள் உங்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள் என்றும், தலைவனின் ஈட்டி யாரிடமிருந்தாலும் அவர்களுக்கு வணக்கம், கீழ்ப்படிதல் செலுத்தப்பட வேண்டுமென்றும் அத்துடன் அதனையுடையவர் எந்தப் பொருளைக் கேட்டாலும் அது கொண்டு வரப்படும் என்றும் விளக்கம் அளித்தார். உடனே லிவிங்ஸ்டன் மகிழ்ச்சியுடன் தனக்கு ஒரு ஆடு வேண்டும் என்றார். உடனே அங்கிருந்த ஆப்ரிக்கர்கள் தன் ஆட்டை விட மிக செழிப்பான ஒரு ஆட்டு மந்தையையே கொண்டு வந்து கொடுத்தார்கள். லிவிங்ஸ்டன் தனக்கு விருப்பமான ஒரு பொருளை அந்த தலைவனுக்கு கொடுத்ததன் பயனாக தனக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியத்தை நினைத்து கர்த்தரைத் துதித்தார்.

 உடன்படிக்கை என்றால் இரண்டுபேர் செய்துகொள்ளும் ஒப்பந்தமாகும். இதன்படி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சில காரியங்களை பரிமாறிக் கொள்ளுகிறார்கள். அந்த உடன்படிக்கையின் தீர்மானமானது, தொடர்ந்து அவர்களை அன்பின் ஐக்கியத்திற்குள்ளும், ஆழமான நட்புறவுக்குள்ளும் வழிநடத்துகிறது.

தேவபிள்ளைகளே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அவரை நேசித்து, அன்பு செலுத்தி, அவருடைய வழியிலே நடப்பதுதான்.

நினைவிற்கு:- “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவா. 3:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.