bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

Nov 12 – விசாலமாக்கு!

“நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு” (ஏசா. 54:3,2).

நீங்கள் பெருக வேண்டும். மேன்மையடைய வேண்டும். ஆசீர்வாதமாயிருக்க வேண்டும். ஆகவே விசுவாசத்தோடுகூட உங்கள் கூடாரத்தின் இடத்தை, உங்கள் எல்லையை விரிவாக்குங்கள். உங்களுடைய தரிசனத்தை பெருகச்செய்யுங்கள்.

ஒரு முறை ஒரு குளத்தங்கரையில் அநேகர் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவனுக்கு நீண்ட நேரம் மீன் கிடைக்காமலிருந்தது. கடைசியில் அவனுக்கு பெரிய மீன் ஒன்று அகப்பட்டது. அருகிலிருந்த மற்ற தூண்டில்காரர்களெல்லாம் ஒரு பக்கம் அவன்மேல் பொறாமை கொண்டாலும், நீண்ட நேரத்திற்குப் பிறகு அவனுக்கு மீன் கிடைத்ததினாலே அந்தப் பெரிய மீனை அவன் சந்தோஷமாய் சாப்பிட்டு மகிழட்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

ஆனால் அந்த பெரிய மீனைப் பிடித்த அவனுடைய முகத்தில் சந்தோஷமில்லை! இவ்வளவு பெரிய மீனாய் இருக்கிறதே என்று முறுமுறுத்தான். பிறகு அந்த மீனை மறுபடியும் குளத்திற்குள்ளே ஓடவிட்டு விட்டான். இதைப் பார்த்த மற்றவர்களுக்கு அது புரியாத புதிராயிருந்தது. மீண்டும் அவன் தூண்டில் போட்டான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு சிறிய மீன் தூண்டிலில் சிக்கினது. அந்த சிறிய மீனைக் கண்ட அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அதை எடுத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

அவனுடைய இந்தச் செயலால் இன்னும் ஆச்சரியமடைந்த மற்ற தூண்டில்காரர்கள் அவனைப் பார்த்து, “நீ ஏன் அந்தப் பெரிய மீனை விட்டுவிட்டாய்? சிறிய மீனிலே அப்படி உனக்கு என்ன சந்தோஷம் வந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவன் சொன்ன பதில் எல்லாருக்கும் வியப்பைத் தந்தது. “என் வீட்டிலே பொரிப்பதற்கு சிறிய சட்டிதான் இருக்கிறது, பெரிய மீன் அதிலே கொள்ளாது. ஆகவேதான் சிறிய மீனுக்காக காத்திருந்தேன்” என்றான்.

அநேகர் அதுபோல சிறிய வாய்ப்பு, சிறிய முன்னேற்றத்திலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். அவர்களது தரிசனம் குறுகியிருக்குமென்றால் ஆசீர்வாதமும் குறைவாகத்தான் இருக்கும். “கர்த்தருக்காக பெரிய காரியங்களைத் திட்டமிடுங்கள். கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்துமுடியுங்கள்” என்று முழங்கினார் வில்லியம் கேரி! ஆம், நீங்கள் பெருகுகிறவர்களாய், பெரிய காரியங்களைச் செய்கிறவர்களாய் காணப்பட வேண்டும். அப். பவுல் சொல்லுகிறார், நீங்கள் விசுவாசத்திலே பெருகுங்கள் (கொலோ. 2:7). அன்பிலே பெருகுங்கள் (1 தெச. 4:10). கிருபையிலே பெருகுங்கள் (2 கொரி. 4:15).

நீங்கள் பெருக வேண்டுமென்றால் முதலாவது, உங்களுடைய விசுவாசம் பெருக வேண்டும். விசுவாசம் பெருகும்போதுதான் கூடாரம் விசாலமாகும். நீங்கள் பெருகின பிறகு விசாலமாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தால் ஒருபோதும் நீங்கள் பெருகுவதில்லை. கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி; உனக்கு அதைத் தருவேன்” (ஆதி. 13:17) என்று வாக்களித்தார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் பெருகப் போகிறீர்கள். விருத்தியடையப் போகிறீர்கள். ஆகவே தேசத்தின் நீளமும் அகலமும் நடந்து அதை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக” (உபா. 1:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.