AppamAppam - Tamil

Nov 8 – உயருவாய்!

“கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்” (உபா. 28:14).

  அநேகர் ‘என்னுடைய வேலை ஸ்தலத்தில் முன்னேற முடியவில்லை. எனக்கு பிற்பாடு வேலையில் சேர்ந்தவர்களெல்லாம் பெரிய வேலைக்கு உயர்ந்துவிட்டார்கள். என்னுடைய உத்தியோக உயர்வு தடைபட்டிருக்கிறது. எனக்கு சம்பள உயர்வு இல்லை’ என்றெல்லாம் சொல்லி அங்கலாய்க்கிறார்கள். “நீ வாலாகாமல் தலையாவாய். நீ கீழாகாமல் மேலாவாய்” என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, இந்த வாக்குத்தத்தத்தை உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களை நேசிக்கிற கர்த்தர், நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து உயர வேண்டுமென்று விரும்புகிறார்.

வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்த காலம் இது. மிகக் குறைந்த சம்பளத்திற்காக அநேகம் பேர் போட்டிபோடுகிற ஒரு பஞ்சநிலை நிலவுகிறது. வேலை இல்லாமல் பலர் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சூழ்நிலை எதுவாயிருந்தாலும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொண்டு ஜெபிக்கிற ஒவ்வொருவரும் நிச்சயமாகவே உயர்ந்து மேலாவார்கள்.

கெட்ட குமாரன் தகப்பனண்டை திரும்பி வந்தபோது, அவனுடைய சிந்தனைகள், ஏக்கங்களெல்லாம் மிக தாழ்வாகவேயிருந்தன. ‘உம்முடைய வீட்டிலுள்ள “கூலிக்காரரில்” ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்’ என்று அவன் கேட்டான். ஆனால் தகப்பனுடைய அன்பை பாருங்கள். அவன் கீழாகாமல் மேலாக வேண்டும். வாலாகாமல் தலையாக வேண்டுமென்பதே தகப்பனுடைய பிரியமாயிருந்தது. ஆகவே அவன் அவனுக்கு உயர்ந்த வஸ்திரங்களை தரிப்பித்தான். பாதரட்சைகளைக் கொடுத்தான். மோதிரத்தை அணிவித்தான். மட்டுமல்ல, தன்னுடைய மகனாகவே ஏற்றுக்கொண்டான்.

யோசேப்பைப் பாருங்கள்! அவன் எகிப்துக்கு ஒரு அடிமையாய் வந்தான். ஆனால் அவன் அடிமையாய் இருப்பது கர்த்தருக்கு பிரியமும் சித்தமுமாய் இருக்கவில்லை. கர்த்தர் அவனை உயர்த்தி, உயர்த்தி எகிப்து தேசத்திற்கு அதிபதியாக்கினார். வாலாய் இருந்த அவன் தலையானான்.

தாவீதின் வாழ்க்கையும் அவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையாகத்தான் இருந்தது. ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அவன் கர்த்தரை தன் மேய்ப்பனாய் ஏற்றுக்கொண்டதினாலே, அவன் கீழாகாமல் மேல்நோக்கி முன்னேறிக்கொண்டே வந்தான். கர்த்தர் தாவீதுக்கு முன்பாக கோலியாத்தை தாழ்த்தினார், சவுலை தாழ்த்தினார். இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் முன்பாக தாவீதை உயர்த்தி, உயர்த்தி மேன்மைப்படுத்தினார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய சிறுமையின் நாட்கள் நீங்கிப்போகும். உங்களுடைய தளர்ச்சியின் நாட்கள் விரைவாக விலகிப்போகும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்த்தப்பட்டீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஆசீர்வாதத்தையும், கர்த்தருடைய கிருபையையும் சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள். கர்த்தரை மாத்திரம் இறுக பற்றிக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்” (ஏசா. 45:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.