AppamAppam - Tamil

Nov 7 – வல்லமை உண்டாகும்படி!

“என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலை நிறுத்தினேன்” (யாத். 9:16).

கர்த்தர் உங்களை நிலைநிறுத்தியிருக்கிறார். ஜீவனுள்ளோர் தேசத்திலே காத்துக் கொண்டிருக்கிறார். காரணம் என்ன? உங்கள் மூலமாய் கர்த்தருடைய வல்லமை வெளிப்பட வேண்டும், கர்த்தருக்காக நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான்.

நீங்கள் கர்த்தருக்காக வல்லமையாய் விளங்க வேண்டுமென்றால் வேதத்தைத் திரும்பத் திரும்ப வாசிப்பீர்களாக. கர்த்தர் எப்படி பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையெல்லாம் வல்லமையாய் பயன்படுத்தினார் என்பதை தியானிப்பீர்களாக. அது உங்களுக்கு வல்லமையைப் பெற்றுத் தரும் பாடங்களாய், அனுபவங்களாய் அமையட்டும்.

 வில்லியம் யூசூப் என்பவர் சிரியா தேசத்திற்கு மிஷனரியாகச் சென்றார். அந்த தேசத்தில் ஊழியம் செய்வது கடினமாய் இருந்தது. ஐம்பது ஆண்டுகள் பணிபுரிந்தும், போதுமான ஆத்தும அறுவடை கிடைக்கவில்லை. ஆகவே, ஒருநாள் அமர்ந்து தன் ஊழியத்தைக் குறித்து வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய ஆரம்பித்தார்.

கடைசியாக அவர் ஒரு வாரம் முழுவதும் இரவும் பகலும் கர்த்தருடைய வசனங்களை வாசிப்பதிலும், தியானிப்பதிலும் செலவிட தீர்மானித்தார். ஒவ்வொரு நாளும் தாகத்தோடும், பசியோடும் அந்த வசனங்களை வாசித்தபோது ஆவியானவர் அவருடைய உள்ளத்தில் அருமையாய் பேசினார். “மகனே, நான் பட்சபாதமுள்ள தேவன் அல்ல; பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்குக் கொடுத்த வல்லமையையும், வரத்தையும் உனக்குக் கொடுக்க ஆவலாயிருக்கிறேன். ஆனால் நீயோ இதுவரையிலும் உன்னுடைய ஊழியத்திலும், மிஷனெரி பணியிலும் எனக்குக் கொடுக்க வேண்டிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. உன்னுடைய சொந்த முயற்சியினால் சுயபெலத்தை நம்பிச் செயலாற்றிக் கொண்டு இருந்ததினால் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியவில்லை” என்றார்.

 அப்போது அந்த மிஷனெரி தன்னை வேத வாசிப்பிற்கும், ஜெபத்திற்கும் மிக அதிகமாய் ஒப்புக் கொடுத்தார். எரிகோ கோட்டையை எந்த மனுஷனும் தன் சுயபெலத்தினால் விழ வைக்க முடியாது. செங்கடலை யாரும் தன்னுடைய பெலத்தினால் இரண்டாகப் பிளக்க முடியாது. யோர்தானை யாராலும் பின்னிட்டு திரும்பச் செய்ய முடியாது. அவையெல்லாம் தேவனுடைய பெலத்தினாலும் வல்லமையினாலேயுமே நடக்கக் கூடியவை.

அந்த மிஷனெரி முதல் கட்டமாக தான் தொடர்ந்து சந்தித்துவரும் நபர்களில் கடினமான இருதயமுடைய பதினொருவருடைய பெயர்களை எழுதி வைத்து தேவனுடைய வல்லமை அவர்களுடைய வாழ்க்கையில் விளங்க வேண்டுமென்றும், அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும் ஜெபித்தார். மூன்று வாரங்களுக்குள்ளாக அத்தனை பேரும் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின்பு அவருடைய ஊழியம் மிக வல்லமையானதாய் மாறிவிட்டது.

தேவபிள்ளைகளே, நீங்கள் வேதத்திற்கும், ஜெபத்திற்கும் முதலிடம் கொடுப்பீர்களென்றால், கர்த்தர் நிச்சயமாகவே தம்முடைய வல்லமையையும், கிருபைகளையும் உங்களுக்குத் தருவார்.

நினைவிற்கு:- “உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்” (1 நாளா. 29:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.