AppamAppam - Tamil

Nov 4 – பாவநிவாரணம்!

“நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்” (ஆதி. 4:7).

பாவம் எல்லா விதங்களிலும் கொடூரமானது. பாவம் வாசற்படியிலேயே படுத்திருக்கும். பாவம் ஒரு மனுஷனைத் தொடர்ந்து பிடிக்கும். பாவம் ஒருவனுடைய எலும்புகளோடுகூட படுத்துக்கொள்ளும்.

ஒரு ராஜா யுத்தத்தில் வெற்றி பெற்று, திரளானவர்களைக் கைதிகளாக்கிக்கொண்டு வீடு திரும்பினான். கைதிகளுக்கு விலங்கிட அவனிடத்தில் போதுமான விலங்குகள் இல்லை. சிறையில் போடுவதற்கு போதிய சிறைச்சாலையுமில்லை. ஒரு கொல்லன் ராஜாவிடம் ஓடி வந்து, ‘நான் உங்களுக்கு வலுவான சிறைக்கூடத்தை அமைத்துத் தருகிறேன். எந்த விதத்திலும் உடைக்க முடியாத உறுதியான விலங்குகளையும் செய்து தருகிறேன்’ என்று சொல்லி, அங்குள்ள சிறைக்கைதிகள் எல்லாருக்கும் பெரிய பெரிய விலங்குகளைச் செய்தான்.

அந்த விலங்குகளையும், சிறைச்சாலையையும் குறித்து கேள்விப்பட்ட அருகிலுள்ள நாட்டை ஆண்ட ராஜா இரகசியமாய் அந்த கொல்லனுக்கு செய்தி அனுப்பி, ‘எங்கள் தேசத்திற்கு வர முடியுமா, இப்படிப்பட்ட விலங்குகளை செய்து தர முடியுமா?’ என்று கேட்டார்.

ஆனால் இந்த செய்தி இங்குள்ள ராஜாவின் காதுகளுக்கு எட்டினது. அவர் உடனே அந்த கொல்லனைப் பிடித்து விலங்கிட்டு சிறையில் அடைத்துவிட்டார். கொல்லன் மிக பளுவான விலங்குகளை கால்களிலும், கைகளிலும் போட்டுக்கொண்டு தவியாய் தவித்தான். ‘ஐயோ! இது நான் செய்த விலங்குகள் அல்லவா? அதனுடைய சக்தியும் வலிமையும் எனக்கு தெரியுமே! இந்த விலங்குகளிலிருந்து இனி என்னால் தப்பவே முடியாதே! நான் இதை செய்யாமல் இருந்தால் எவ்வளவு நலமாய் இருந்திருக்கும்’ என்று புலம்பி அழுதான்.

 வேதம் சொல்லுகிறது: “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்” (1 யோவான் 3:8). பாவம் என்பது மனுக்குலத்தை ஆட்டிவைக்கும் ஒரு பயங்கரமான பிசாசின் வல்லமையாகும். பாவம் ஆட்டி வைப்பதுடன், அடிமைப்படுத்தியும் விடுகிறது. பாவத்தைக் குறித்து வேதம் திரும்பத்திரும்ப எச்சரிக்கிறதை வாசித்துப் பாருங்கள்.

பாவம் அநேகருடைய கண்களில் இனிமையாய் காட்சியளிக்கிறது. உலக ஆசை இச்சைகள் மனுஷருடைய கண்களுக்கு இனிமையானவையாய்த் தோன்றி கவர்ந்திழுக்கின்றன. அந்த வஞ்சகத்தை சாதாரணமாய் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. சிரங்குள்ளவர்களின் கைகளைப் பாருங்கள்! அவர்கள் அதை சொறியும்போது சற்று சுகமாய் தோன்றும். ஆனால் தொடர்ந்து சொறிந்துகொண்டே இருந்தால் அது ரணமாகிவிடும்.

பாவமும் இதைப்போலத்தான். முதலில் உற்சாகமாய் காட்சியளிக்கும். முடிவிலே விட்டு விட முடியாத அடிமைத்தனத்திற்குள் அது கொண்டு சென்று விலங்காக மாறிவிடுகிறது. வேதம் சொல்லுகிறது: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக். 1:14,15).

நினைவிற்கு:- “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக” (வெளி. 1:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.