AppamAppam - Tamil

Nov 3 – குடும்ப பலிபீடம்!

“நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து… தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்” (ஆதி. 35:1).

‘நீ குடியிருந்து பலிபீடத்தை உண்டாக்கு’ என்று கர்த்தர் சொன்னார். ஆனால் புதிய ஏற்பாட்டில் குடும்ப ஜெபபீடமே கர்த்தர் விரும்பும் பலிபீடமாயிருக்கிறது. தேவபிள்ளைகள் ஐக்கியமாய், சமாதானமாய் வாழ குடும்ப ஜெபம் மிகவும் அவசியமாயிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் கர்த்தர் யாக்கோபுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தார். ‘நீ குடும்பமாய் எழுந்து பெத்தேலுக்குப்போ. உன் தேவனைச் சந்திக்க கடந்து செல்’ என்பதே அது. குடும்பமாய் அவருக்கு பலி செலுத்தும்போது, அவர் அங்கே உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே இதன் அர்த்தம்.

குடும்ப ஜெபமில்லாத வீடு எத்தனை பெரியதாய் அலங்காரமாய் இருந்தாலும் அது வீடாக இருப்பதில்லை. அது சக்கரமற்ற வண்டி. அது கூரையில்லாத வீடு. அநேக குடும்பங்களில் காணப்படும் தொல்லைக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், சந்தேகங்களுக்கும் மூலகாரணம் குடும்ப ஜெபம் இல்லாததுதான். குடும்ப ஜெபம் இருக்கும்போது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

பழங்கால பாடல் ஒன்று உண்டு. “வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோன் உயரும்” என்பதே அந்த பாடல்! அதுபோல ஜெபம் உயர குடும்பம் உயரும், குடும்பம் உயர திருச்சபை உயரும். திருச்சபை உயர தேசமே உயரும். அல்லேலூயா!

ஒரு முறை ஒரு ஊழியர் சொன்னார்: ‘இந்திய தேசத்தின் தலைமைபீடம் டில்லி அல்ல! அது குடும்ப ஆராதனை நடைபெறும் வீடுகளில்தான் இருக்கிறது’. இது எத்தனை உண்மையானது! ஒரு இளம் வாலிபர் ஒருவர் ஒரு பெரிய சபையின் போதகராய் நியமிக்கப்பட்டார். அந்த சபையில் எழுப்புதல் ஏற்படுத்த ஏராளமான பிரசங்கங்களை செய்தார். பலன் ஏற்படவில்லை. பெரிய பெரிய கட்டிடங்களை கட்டியெழுப்பி அநேக ஆத்துமாக்களைக் கொண்டுவர வழி செய்தார். பலனில்லை. பெரிய பெரிய சுவிசேஷகர்களைக் கொண்டுவந்து உயிர்மீட்சிக் கூட்டங்களை நடத்தினார். பலனில்லை.

முடிவில் தன் சபையில் எழுப்புதல் ஏற்பட என்ன வழி என்று தன்னைத் தாழ்த்தி ஜெபித்தார். கர்த்தர் கொடுத்த ஆலோசனை என்ன தெரியுமா? உன் சபையிலுள்ள ஒவ்வொரு விசுவாசியின் வீட்டிலும் குடும்ப ஜெபம் நடத்தும்படி ஆலோசனை கூறு என்றார். அப்படியே வீட்டுக் கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது கர்த்தர் சபையை ஆசீர்வதித்தார். அங்கு பெரிய எழுப்புதல் வந்தது.

பெற்றோர் பிள்ளைகளுக்கு வைத்துப் போகக்கூடிய செல்வங்களுக்கெல்லாம் சிறந்த செல்வம் தேவபக்தியாகும். அதைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதற்கு கிடைக்கும் அரிய வழிதான் குடும்ப ஜெபம்.

தேவபிள்ளைகளே, இன்று முதல் உங்களுடைய குடும்பத்தில் குடும்ப ஜெபத்தை ஆரம்பியுங்கள். பிள்ளைகளுக்கு வேதம் வாசிக்கக் கற்றுக்கொடுங்கள். எந்தவிதத்திலும் உங்களுடைய குடும்ப பலிபீடம் உடைந்துபோய் விடக்கூடாது. ஒருவேளை இடிந்துபோயிருந்தால் இன்றைக்கு குடும்ப பலிபீடத்தை மீண்டும் கட்டி எழுப்புவீர்களாக!

நினைவிற்கு:- “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக் கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள்” (சங். 128:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.