AppamAppam - Tamil

Nov 1 – சூரியன் உதயமாயிற்று!

“அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று” (ஆதி. 32:31).

யாக்கோபு தன் வாழ்க்கையிலே, ஆயிரமாயிரமான சூரிய உதயங்களை சந்தித்து இருந்திருக்கக்கூடும். ஆனால் இந்த சூரிய உதயமோ, விசேஷமான, ஆசீர்வாதமான ஒரு சூரிய உதயம். யாக்கோபு என்ற அவனுக்கு “இஸ்ரவேல்” என்ற புதிய பெயர் உதயமாயிற்று.

யாப்போக்கு ஆற்றங்கரையில் ஒரு இரவை அவன் தனிமையாக கர்த்தரோடு செலவழிக்கத் தீர்மானித்தான். ஒருபக்கம் அவனுடைய அண்ணனைப் பற்றிய பயம் வாட்டியது. மறுபக்கம் மனைவி பிள்ளைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உள்ளத்தை அழுத்தினது. எதிர்காலத்தைப் பற்றிய நினைவுகள் அவனுடைய உள்ளத்தை வாட்டின.

அவன் அந்த இரவு கர்த்தரோடு போராடி ஜெபிக்கத் தீர்மானித்து, தன் மனைவி பிள்ளைகள் யாவரையும், ஆற்றுக்கு அக்கரைப்படுத்திவிட்டு தேவ சமுகத்தில் தனித்து காத்திருந்தான். கர்த்தர் அங்கே அவனை சந்தித்தார். அந்த சந்திப்பு அவனுடைய வாழ்க்கையில் பெரிய வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. பெரிய நம்பிக்கையை உதயமாக்கிற்று. “அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று” என்று வேதம் சொல்லுகிறது.

    நீங்கள் பல இருளின் பாதைகளிலே நடந்துவரக்கூடும். எதிர்காலம் எப்படியிருக்குமோ, சோதிக்கும் இருளில் எப்படி ஜெயம்பெறுவோமோ என்கிற பயம் மேற்கொள்ளக் கூடும். எல்லாப் பக்கமும் கரிய மேகங்கள் சூழ்ந்து வெளிச்சமே இல்லாத காரிருள் உங்கள் வாழ்க்கையைப் பற்றிக் கொள்ளும்போது, கர்த்தருடைய பாதத்தில் யாக்கோபைபோல போராடி ஜெபிக்க கற்றுக்கொள்ளுங்கள். கர்த்தர் நிச்சயமாய் எல்லா இருளின் ஆதிக்கங்களையும் மாற்றி, உங்களில் சூரியனை உதிக்கச் செய்வார். கர்த்தர் சொல்லுகிறார், “ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்” (மல். 4:2).

கர்த்தருடைய ஒளி உங்கள்மேல் வீச வேண்டுமென்றால், உங்களுக்குள்ளிருக்கிற பாவ இருள் அகற்றப்படவேண்டும். ஆதியிலே ஒளியாகிய தேவனால், ஒளியின் சாயலால் உருவாக்கப்பட்ட மனிதன், பாவம் செய்து பிசாசின் சாயலான இருளை சுதந்தரித்துக் கொண்டான். ஆகவேதான் அவன் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் இழந்து சாபத்தின் இருளுக்குள்ளாக கடந்து செல்ல வேண்டியதாயிற்று. மனிதன் இழந்து போன வெளிச்சத்தை அவனுக்கு திரும்பக் கொடுக்கவும், அவனுடைய சுகவாழ்வை மீண்டும் தரவும், நீதியின் சூரியனாகிய இயேசு இந்த பூமியிலே உதித்தார். வேதம் சொல்லுகிறது, “அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்கு பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்” (2 சாமு. 23:4).

ஒரு நாள் சிமியோனின் வாழ்க்கையில் சூரியன் உதித்தது. இயேசுவை முகமுகமாய் கண்ட நாள்தான் அந்த நாள். இயேசுவை கையில் ஏந்திக்கொண்டு அந்த சூரியபிரகாசத்தில் மகிழ்ந்து, “தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்” (லூக். 2:31,32). தேவபிள்ளைகளே, இதோ நீதியின் சூரியன் உங்கள்மேல் பிரகாசிக்க கர்த்தர் விரும்புகிறார். யாக்கோபின் வாழ்க்கையில் சூரியன் உதயமானதைப்போல் உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயமாகவே சூரியன் உதயமாகும்.

நினைவிற்கு:- “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்” (யோவா. 9:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.