AppamAppam - Tamil

Oct – 30 – பரதேசிகள்!

“…தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” (1 பேது. 1:2).

தாங்கள் பரலோகத்துக்குரியவர்கள் என்பதும், தங்களுடைய நித்திய வாசஸ்தலம் பரலோகத்தில் இருக்கிறது என்பதும் யார் யாருடைய உள்ளத்திலே உறுதியாய் இருக்கிறதோ, அவர்கள் இந்த உலகத்திற்கு அந்நியரும் பரதேசிகளுமாகவே இருப்பார்கள். “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).

தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆத்துமா பரலோகத்தை வாஞ்சித்து கதறட்டும். அப். பவுல், “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாக் காணப்படமாட்டோம். இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோட வேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்” (2 கொரி. 5:1-4) என்று எழுதுகிறார்.

தாவீது ராஜாவின் அனுபவத்தைப் பாருங்கள். அவர் ஒரு பெரிய ராஜாதான். செல்வாக்கும் செல்வங்களும் இருந்தன. ஆனால் அவைகளின் மத்தியிலும் தான் ஒரு பரதேசி என்பதை மறந்து போய்விடவில்லை. பூமியிலே நான் பரதேசி என்று அவர் அறிக்கையிடுகிறார் (சங். 119:19). “நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின” (சங். 119:54).

வெளி தேசத்திலிருந்த ஒரு தாயார், இந்தியாவிலுள்ள ஒருவருக்கு அனாதைச் சிறுவர்களை கண்காணிக்கும் படி ஏராளமான பணத்தை ஒரு ஊழியருக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் அவர் அனாதை சிறுவர்களுக்கு இல்லம் வைத்து நடத்தாமல் தனக்கென்று வீடு, பங்களா என்று வாங்கிக்கொண்டார். மட்டுமல்ல, நேரிடையாக அந்த சகோதரியினிடத்தில் போய் கேட்டால் இன்னும் ஏராளமாக பணம் கிடைக்கும் என்று அங்கே புறப்பட்டுப் போனார்.

அந்த சகோதரியின் வீட்டைப் பார்த்த உடனே இவருக்கு தூக்கிவாரிப் போட்டது. அங்கே அந்த சகோதரி மிக மிக சிறிய வீட்டில் எந்த வசதிகளும் இல்லாமல் ஏழ்மையான நிலையில் இருக்கக் கண்டார். அந்த சகோதரி அவரைப் பார்த்து, “சகோதரனே, என்னுடைய வசதிகளையெல்லாம் தியாகம் பண்ணி, மூன்று வேளை சாப்பிட்டதை ஒரு வேளையாக்கி, இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்கு என் மனம் முன் வந்தது. இதற்கு முக்கிய காரணம் நான் இந்த பூமியிலே பரதேசி என்று உணர்ந்ததுதான்” என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த ஊழியக்காரர் தலை குனிந்தார்.

தேவபிள்ளைகளே, “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்” (1 தீமோ. 6:7).

நினைவிற்கு:- “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (1 தீமோ. 6:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.