AppamAppam - Tamil

OCt – 26 – விசுவாசம் என்னும் கேடகம்!

 “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்” (எபே. 6:16).

விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டு நில்லுங்கள். அந்த கேடகம் உங்களுக்கு பாதுகாப்பைத் தருகிறது; அடைக்கலத்தை தருகிறது; சாத்தானின் ஆயுதங்கள் உங்களைத் தாக்காதபடி தற்காத்துக் கொள்ளுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அப்போது மாணவர்கள் போலீசார் மேல் சரமாரியாக கற்களை வீசினார்கள். போலீசார் கைகளில் கேடகம் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டார்கள். தலையில் இரும்பு தொப்பி அணிந்திருந்தார்கள். போலீஸ் வாகனத்தின் மேல் கல் எறியப்படுகிறது என்பதற்காக கம்பி வலைகளை அதன் ஜன்னல்களில் மாட்டினார்கள். அவை கேடகமாக விளங்கினது. அப்படி இல்லாவிட்டால் அவர்கள் சரீரத்தில் காயப்பட்டிருந்திருப்பார்கள். வாகனமும் சேதப்பட்டிருந்திருக்கும்.

ஆவிக்குரிய பாதையில் முன்னேற விரும்புகிற உங்களுக்கு விரோதமாக ஒரு போராட்டமுண்டு. நீங்கள் முன்னேற முடியாதபடி சாத்தான் இடைவிடாமல் உங்கள்மேல் அம்பு எய்துகொண்டேயிருக்கிறான். விரோதிகள் வில்லிலே அம்புக்கு பதிலாக விஷமுள்ள பாம்புகளை வைத்து எய்ததாக சில புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பாம்பின் விஷம் பயங்கரமாக இருப்பதினால் அம்பு போல் பாய்ந்து சென்று எதிரிகளை தாக்கி கடிக்குமாம்.

சாத்தான் எய்யும் அம்பைப்பற்றி அப். பவுல் எழுதும்போது, அது “அக்கினியாஸ்திரம்” என்று குறிப்பிட்டார். வில்லிலே தீப்பந்தத்தை வைத்து அம்பாக எறியும்போது அது எரிபந்தமாக பாய்ந்து சென்று தாக்கும். சாத்தானின் அக்கினியாஸ்திரம் என்பது அக்கினி போன்ற சோதனைகளையும் பாடுகளையும் குறிக்கிறது. சாத்தான் எறிகிற இந்த அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அப்படியே தள்ளிவிடத்தக்கதாக ஒரு கேடகம் இருந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்! அதுதான் விசுவாசம் என்னும் கேடகம்.

இயேசுவே உங்களுடைய விசுவாச கேடகம். சாத்தான் அம்பைப் போல உங்களைத் தாக்க வரும்போது, நீங்கள் விசுவாசத்துடன் கிறிஸ்துவிலே மறைந்து கொள்ளுவீர்களாக. கிறிஸ்துவுக்கு முன்பாக சத்துருவால் நிற்க முடியாது. ஏனென்றால் மரணத்திற்கு அதிபதியான பிசாசை இயேசு தமது மரணத்தினாலே மேற்கொண்டார் (எபி. 2:14). நீங்கள் சாத்தானைக் கண்டு பயப்படாதிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக். 4:7).

    ஒருமுறை ஒரு தேவ ஊழியர், ஊழியத்தை முடித்துவிட்டு, மிகவும் களைப்பாக வந்து, தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சாத்தான் வந்து அவருடைய கட்டிலை அசைத்தான். அவர் தூக்கத்திலிருந்து எழுந்து, கட்டிலின் மறுபக்கத்தில் சாத்தான் உட்கார்ந்திருக்கிறதை கவனித்தார். அவனைப் பார்த்து அசட்டையாக, ‘ஓ! நீ தானா? நான் பூமி அதிர்ச்சி என்று நினைத்தேன்’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் படுத்து தூங்கிவிட்டார். சாத்தானுக்கு அவமானம் தாங்க முடியாமல் ஓடிப்போய் விட்டானாம். தேவபிள்ளைகளே கர்த்தர் எப்பொழுதும் உங்களோடிருக்கிறபடியினால் நீங்கள் சமாதானமாகவும், சந்தோஷமாகவும் இருங்கள்.

நினைவிற்கு:- “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.