AppamAppam - Tamil

Oct – 24- பிந்தாதீர்!

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” (எபே.5:16).

‘காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது’ என்பார்கள். அநேகர் காலத்தின் அருமையை அறியாமல் அதை வீணாக்கிவிட்டு பின்பு கண்ணீர் வடிக்கிறார்கள். சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் பிந்தி வருவதே வழக்கம். அலுவலகத்திற்கானாலும் சரி; ஆலயத்திற்கானாலும் சரி; பிந்தி வந்து அதன் பலனாய் தோல்வியையே தழுவுகிறார்கள்.

காலம் கடந்த பின், இழந்துபோன சந்தர்ப்பங்களையும், தருணங்களையும் எண்ணி கண்ணீர் விடுகிறார்கள். ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் நடத்தி முடிப்பது உங்களுக்குப் பெரிய ஆசீர்வாதத்தையும் சந்தோஷத்தையும் கொண்டு வரும்.

பிரான்ஸ் தேசத்தை அரசாண்ட பேரரசனாகிய நெப்போலியனுக்கு ஒவ்வொன்றையும் ஏற்றநேரத்தில் முடிக்கவேண்டும் என்ற ஆர்வமுண்டு. அவன் ஒருபோதும் காலம் தவறினதில்லை. ஆனால், அவனுடைய தளபதிகளோ குறிப்பிட்ட நேரத்தில் வருவதை அசட்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் நெப்போலியன் தன் படைவீரர்களைப் பெரிய விருந்து ஒன்றுக்கு அன்போடு அழைத்தான். விருந்து நேரம் வந்தது. தளபதிகள் வழக்கம் போல சற்று பிந்தி வந்தார்கள். ஆனால் நெப்போலியனோ தனியாக உட்கார்ந்து மிக வேகமாக விருந்தை சாப்பிட்டு முடித்துவிட்டார். அதற்குப் பிறகு ஒவ்வொரு தளபதியாக வந்தார்கள். நெப்போலியன் அவர்களைப் பார்த்து, ‘என் அருமை தளபதிகளே, உணவு நேரம் முடிந்துவிட்டது. இப்போது நாம் கடமைக்காக புறப்படும் நேரம் ஆரம்பித்துவிட்டது. இனி ஒரு நிமிடம்கூட நம்மால் தாமதிக்க முடியாது, யுத்தகளத்துக்குப் போவோம் வாருங்கள்’ என்று சொல்லி அழைத்துக்கொண்டு போய் விட்டார்.

மலைத்து நின்ற தளபதிகள், தலைவனின் வார்த்தையைத் தட்டவும் முடியாமல், பின்வாங்கவும் முடியாமல் வேறு வழியின்றி பசியோடு யுத்தத்திற்குச் சென்றார்கள். அன்று முதல் அவர்கள் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் காலதாமதம் செய்திருப்பார்களா? ஒருபோதும் இல்லை. புத்தியில்லாத கன்னிகைகள் தாமதமாக வந்தார்கள். அதற்குள் மணவாளன் வந்துவிட்டார். கதவும் அடைக்கப்பட்டு விட்டது. தாமதமாய் வந்த அவர்களுக்குக் கிடைத்த பதில், “நான் உங்களை அறியேன்” என்பதுதான். எத்தனை பரிதாபம்! அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. காலம் கடந்த சந்தர்ப்பம் தேம்பினாலும் வராது.

ஏசாவைப் பாருங்கள். அவன் காலத்தையும் நேரத்தையும் கடத்திவிட்டான். வேதம் சொல்லுகிறது: “பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம்மாறுதலைக் காணமற்போனான்” (எபி. 12:17). ஆட்டுக்குட்டியானவர் உங்களைக் கலியாண விருந்துக்கு அழைக்கிறார். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று வேதம் சொல்லுகிறது (வெளி. 19:9).

தேவபிள்ளைகளே, நீங்கள் சரியான நேரத்துக்கு வருவீர்களா? அல்லது தாமதமாகத்தான் வருவீர்களா?

நினைவிற்கு:- “அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை” (எரே. 8:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.