AppamAppam - Tamil

Oct – 21 – சத்துரு!

“…உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு” (ரோமர் 12:20).

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைகளுண்டு, நண்பர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளுண்டு, உறவினர்களிடம் பாராட்ட வேண்டிய அன்புண்டு. அதே நேரத்தில் சத்துருக்களுக்கு காண்பிக்க வேண்டிய தயவுமுண்டு.

ஒரு கிறிஸ்தவ சிறுமி கடையிலே போய் இரண்டு சிறு கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து, அதை அன்பாய் வளர்த்து வந்தாள். அவள் அவற்றிக்கு கரையான் மற்றும் புழு பூச்சிகளையெல்லாம் தேடிக் கொடுப்பாள். தன் கைச்செலவுக்குரிய கொஞ்சம் காசைக்கொண்டு தானியத்தை வாங்கி அவற்றைப் போஷித்தாள். குஞ்சுகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் கொழு கொழுவென்று அருமையாய் வளர்ந்தன.

ஒருநாள் தற்செயலாய் அந்தக் கோழிக்குஞ்சுகள் எதிர்வீட்டுக்காரனின் வேலியின் அருகே மேயச்சென்றன. அவனோ முற்கோபி. இரண்டு குஞ்சுகளின் தலையையும் பிடித்து கழுத்தை திருகி, வேலிக்கு அப்பால் எறிந்தான். அவை செத்து விழுந்தன. அந்த சிறுமியின் உள்ளம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவளோ கிறிஸ்துவுக்குள் தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

அந்த இரண்டு குஞ்சுகளையும் தன் தாயினிடத்தில் கொண்டுபோய், அம்மா, இதை சமையல் செய்து கொடுங்கள் என்று கேட்டாள். பிறகு அந்த இறைச்சி முழுவதையும் எதிர்வீட்டுக்காரனுக்குக் கொண்டுபோய், ‘மாமா, நீங்கள் பசியாய் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு போஜனங்கொடுக்கும்படி கர்த்தர் என் உள்ளத்தில் உணர்த்தினார், இதைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்லி கொடுத்தாள். அந்த வார்த்தையும், அவளுடைய செய்கையும் அவனை நிலைகுலைய செய்தன. அச்செய்கை அவனை அழவைத்ததுடன் மனந்திரும்பவும் வைத்தது.

சத்துருக்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதைக் குறித்து அறியாமையின் நாட்களில் ஒரு பாங்கு இருந்தது. ஆதியாகமம் 4:23-ம் வசனத்தில், ‘லாமேக்கு: எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்’ என்று குறிப்பிடுகிறார். சின்ன காரியத்துக்கும் ஜீவனை எடுத்துவிடுகிற அறியாமையின் காலம் அது!

அதற்குப் பின்பு நியாயப்பிரமாணம் வந்தது. அங்கே காயப்படுத்தினாலோ, மிகவும் தழும்புகள் உண்டாக்கினாலோ அவனை கொலை செய்யக்கூடாது. இன்னொரு காயமும், இன்னொரு தழும்பும் உண்டாக்கிவிடலாம். பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என்பது அந்த நாட்களின் பிரமாணமும், சட்டதிட்டமுமாகும். அதன்பின்பு இயேசு கிறிஸ்துவின் காலம் வந்தது. அன்பின் பிரமாணம் உலகத்தை ஆண்டுகொண்டது. பல்லை உடைத்தால் அவனுடைய மறு பல்லை உடைக்கவேண்டும் என்ற பிரமாணம் நீங்கி, கன்னத்தில் அடிக்கிறவனுக்கு அன்புடனே மறு கன்னத்தையும் திருப்பிக் காண்பிக்கிற கிருபை சூழ்ந்து கொண்டது.

தேவபிள்ளைகளே, தன்னை சிலுவையிலே அறைந்தவர்களை மனப்பூர்வமாய் மன்னித்து, பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் அருளிச் செய்த கர்த்தர், நிச்சயமாக உங்களுக்கும் சத்துருக்களை மன்னிப்பதற்கு கிருபை தருவார்.

நினைவிற்கு:- “ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்” (1 தெச.5:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.