AppamAppam - Tamil

Oct 19 – வாலிபனே!

“…வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்.7:14).

அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஃபோர்டு என்ற பிரபல தொழிலதிபர் ஒருவர், ஒரு சிறப்பான காரைக் கண்டுபிடித்தார். அதன் மூலமாக வாழ்க்கையிலே மிக வேகமாக முன்னேறினார். ஒரு நாள் ஒரு இளைஞன் அவரை சந்தித்து, “மதிப்பிற்குரிய ஃபோர்டு அவர்களே, உங்களிடம் ஏராளமான செல்வமும் பணமும் குவிந்து கிடக்கிறதே. அவ்வளவற்றையும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனக்கு கொடுக்கக் கூடாதா?” என்று கேட்டான்.

அதற்கு அந்த தொழிலதிபர், “என் அன்புக்குரிய வாலிபனே, உன்னுடைய இளமையையும், வாலிபத்தையும் எனக்கு தர முடியுமானால் தந்துவிடு. எனக்குள்ள அனைத்து செல்வத்தையும் நான் உனக்கு கொடுத்து விடுகிறேன். நான் மீண்டும் இந்த வயதை அடைவதற்குள் இதைவிட பல மடங்கு செல்வம் சேர்த்துவிடுவேன்” என்றார். அப்போதுதான் அந்த இளைஞன் செல்வத்தைப் பார்க்கிலும் வாலிபப் பருவம் மிக மிக மேன்மையானது என்பதைப் புரிந்துகொண்டான்.

ஆம், வாலிபப் பருவம் வாழ்க்கையிலேயே மிக விசேஷமான பருவம். வாழ்க்கையின் வசந்தம் வாலிபத்தில்தான் இருக்கிறது. அரசாங்கத்தைப் பாருங்கள். இராணுவத்திற்கு ஆள் எடுக்கும்போதோ அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு ஆள் எடுக்கும்போதோ வாலிபர்களையே தேடுகிறது. அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள கல்லூரி மாணவர்களான வாலிபர்களையே தேடுகிறார்கள். சாத்தானும்கூட வாலிபர்களை சுண்டி இழுத்து உலக ஆபாசங்களைக் காட்டி தனக்கு பயன்படுத்திக் கொள்ளுகிறான்.

தேவபிள்ளைகளே, சிந்தித்துப்பாருங்கள். உங்கள் வாலிபம் யாருக்காக? உலகத்திற்காகவா, அரசியல்வாதிகளுக்காகவா, இச்சைகளுக்காகவா அல்லது கிறிஸ்துவுக்காகவா? அன்றைக்கு இயேசுகிறிஸ்து ஒரு வாலிபனை செத்தவனாக சந்தித்தார். இயேசுவினுடைய உள்ளம் எவ்வளவு துக்கப்பட்டிருந்திருக்கும்! அவனுடைய தாய் அவனுக்காக எவ்வளவு அழுதிருப்பாள்! இயேசு மனதுருகி, “வாலிபனே, எழுந்திரு” என்று உனக்குச் சொல்கிறேன் என்று கட்டளையிட்டார். அப்பொழுது மரித்தவன் உயிரோடு எழுந்தான் (லூக். 7:15).

ஒருவேளை நீங்கள் உயிருள்ளவர்கள் என்று பெயர் கொண்டிருந்து ஆத்துமாவில் செத்தவர்களாயிருக்கிறீர்களா? அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களை கர்த்தர் உயிர்ப்பிக்க விரும்புகிறார். ‘வாலிபனே எழுந்திரு’ என்று கர்த்தர் இன்றைக்கு உங்கள் அருகிலே வந்து சொல்லுகிறார். நீங்கள் கர்த்தருக்கு தேவை. உங்களுடைய வாலிபமானது இச்சைகளுக்கு அடிமைப்பட்டு ஒடுங்கிப்போய்விடக்கூடாது.

சாலொமோன் ஞானி, “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று ஆலோசனை சொல்லுகிறார் (பிர. 12:1). ஏன் வாலிப பிராயத்தில் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்? நாயீனூர் விதவையின் மகன் வாலிபத்திலே மரிக்க வேண்டியதாயிற்று. அந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது அல்லவா? “வாலிபனே எழுந்திரு” என்று சொன்ன ஆண்டவர் இன்றைக்கு உங்களை உயிர்ப்பித்து எழுப்ப வல்லமையுள்ளவராயிருக்கிறார். தேவபிள்ளைகளே, நீங்களும்கூட வாலிபத்தை கர்த்தருக்காக பிரதிஷ்டை செய்வீர்களா?

நினைவிற்கு:- “வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்” (சங். 148:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.