AppamAppam - Tamil

Oct – 17 – வியாதியாயிருந்தேன்!

“வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்” (மத். 25:36).

ஆஸ்பத்திரிகளிலே இருக்கும் வியாதியஸ்தர்களைப் பார்க்கும்போது, உள்ளம் உருகி விடும். அதிலும் அரசாங்க ஆஸ்பத்திரிகளிலே அனாதைகளாய் விசாரிப்பாரற்று படுத்திருக்கும் வியாதியஸ்தர்களைப் பார்க்கும்போது, இருதயம் உடைகிறதாகவேயிருக்கும். அங்கே அநேகம் பேருக்கு சரியான படுக்கை வசதி கிடைப்பதில்லை. அவர்கள் வராண்டாவிலோ, தரையிலோ படுத்துக்கிடந்து போதிய உணவு இல்லாமல் எந்த கவனிப்பும் இல்லாமல் தடுமாறும்போது, அவர்களின் பரிதாபமான நிலைமை இருதயத்தை உருக்குகிறதாயிருக்கும்.

ஒரு முறை ஒரு ஊழியருக்கு கடுமையான ஜுரம் அடித்தது. என்றாலும் தள்ளாடின நிலைமையிலும் ஒரு கன்வென்ஷன் கூட்டத்திலே நின்று பிரசங்கித்தார். கூட்டம் முடிந்தவுடன், வியாதியின் தீவிரத்தை தாங்க முடியாததினால் படுக்கையில் படுத்துவிட்டார். அப்போது ஒரு சகோதரன் அவரைப் பார்க்க வந்தான்.

ஊழியக்காரனாய் இருக்கிற உங்களுக்கு வியாதி வரலாமா? உங்களுக்கு விசுவாசமே இல்லை. பரலோகப் பிதாவாகிய தேவன் வியாதிப்பட்டதில்லை. தேவ ஆவியானவர் வியாதிப்பட்டதுமில்லை. தேவதூதர்கள் வியாதிப்பட்டதுமில்லை. இயேசு பூமியிலிருந்த நாட்களிலும் வியாதிப்பட்டதில்லை. அப்படியிருக்க நீங்கள் வியாதியாய் படுத்திருப்பது என்ன என்று சொல்லி, வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல பேசினான்.

அப்போது அவர், இயேசு நாதரே வியாதியாய் இருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா, அவரும் நோய் கொண்டு ஒடுங்கிப்போய் இருந்ததும் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். அது அந்த சகோதரனுக்கு கோபத்தை உண்டு பண்ணினது. இயேசு ஒருநாளும் வியாதிப்பட்டதுமில்லை. அவர் படுக்கையில் இருந்ததுமில்லை என்று சொன்னான். அப்போது அந்த ஊழியர் வேதத்தைத் திறந்து அவருக்கு மத்தேயு 25:36-ஐ வாசித்து காண்பித்தார். “வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்” என்று சொன்னது இயேசுகிறிஸ்து அல்லவா என்றார். அத்துடன் அந்த சகோதரர் மௌனமாகி விட்டார்.

வேதத்திலே அநேக பரிசுத்தவான்களும் தேவனுடைய ஊழியக்காரர்களும் வியாதியாய் இருந்திருக்கிறார்கள். எலிசா வியாதிப்பட்டிருந்தான் (2 இராஜா. 13:14). எப்பாப்பிரோதீத்து வியாதிப்பட்டிருந்தான் (பிலிப். 2:27). இயேசுவுக்கு அன்பாயிருந்த லாசரு வியாதிப்பட்டிருந்தான் (யோவான் 11:1). தபீத்தாள் வியாதிப்பட்டிருந்தாள் (அப். 9:37).

தேவனில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் வியாதிப்படுக்கை நேரத்தைக்கூட தங்களுக்கு நன்மையாகவே மாற்றிக்கொள்ளுகிறார்கள்.

தேவபிள்ளைகளே, வியாதி நேரத்திலே அந்த வியாதி தேவனிடத்திலிருந்து வருகிற ஒரு அன்பின் சிட்சையா என்று எண்ணி (எபி. 12:6) தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்த்து சரிசெய்ய வேண்டியவைகளை சரிசெய்து, விட்டுவிட வேண்டியவற்றை விட்டுவிட வேண்டும். சாத்தானிடமிருந்து வியாதி வந்தது என்று நீங்கள் அறிந்தால் அவனை எதிர்த்து நில்லுங்கள், அவன் ஓடிப் போவான்.

நினைவிற்கு:- “…அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” (யாத். 23:25).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.