No products in the cart.
Oct – 14 – பிரகாசியுங்கள்!
“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” (தானியேல் 12:3).
நம்முடைய தேவன் நீதியின் சூரியனாயிருக்கிறார். அவருடைய பிள்ளைகளாகிய நீங்கள் பிரகாசிக்க வேண்டாமா? நீங்கள் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறும்படி நீங்கள் கர்த்தருக்காக பிரகாசிப்பீர்களாக! கர்த்தர் உங்களை ஆகாயத்து மண்டலத்திலுள்ள ஒளியைப்போல, நட்சத்திரங்களைப் போல வைத்திருக்கிறார் என்பதை மறந்து போவிடக்கூடாது.
கர்த்தர் உங்கள் தீபத்தை ஏற்றி வைத்தது உண்மையானால், நீங்களும் அநேகருடைய உள்ளத்தில் இரட்சிப்பின் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏசாயா சொல்லுகிறார், “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசாயா 60:1,2).
மாத்திரமல்ல, “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்” (ஏசாயா 60:3). இது கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற உறுதியான வாக்குத்தத்தம். அநேகர் அதைரியமடைந்து நான் வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல எப்படி பிரகாசிப்பது, விழுந்துவிட்டால் என்ன செய்வது, நான் சாதாரணமான கிறிஸ்தவ வாழ்க்கையே வாழ விரும்புகிறேன் என்று சொல்லுகிறார்கள்.
தேவபிள்ளைகளே, மனம் சோர்ந்து போகாதேயுங்கள். கர்த்தர் உங்களைத் தம்முடைய கைகளில் ஏந்தியிருக்கிறார். ஏழு நட்சத்திரங்களை தன்னுடைய கையில் ஏந்தின ஆண்டவர், ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிற ஆண்டவர், உங்களை நட்சத்திரமாக என்றென்றும் பிரகாசிக்கச் செய்வார் (வெளி. 1:16,20). கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கிறவர்களை, பாடுபட்டு உழைக்கிறவர்களை, நட்சத்திரமாக எண்ணி தன் வலது கையிலே பாதுகாக்கிறார். ஆம், நீங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறபடியால் உங்களைக் கண்ணின் மணியைப் போல பாதுகாக்கிறார்.
“அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (சங். 95:7). ஆம், அவருடைய மேய்ச்சலின் ஆடுகளாகிய உங்களை ஒருவனும் ஒரு காலத்திலும் அவரது கைகளிலிருந்து பறித்துக் கொள்ளவே இயலாது. அவர் வழுவாதபடி உங்களைக் காக்கவும் நம்முடைய மகிமையான வருகையிலே உங்களை மாசற்றவர்களாய் நிலைநிறுத்தவும் வல்லமையுள்ளவராயிருக்கிறார். நீங்கள் கர்த்தருக்காக பிரகாசித்து எரியவேண்டும்.
சிறிதாகப் பறக்கும் மின்மினி பூச்சிகூட ஒரு சிறு வெளிச்சத்தை கொடுக்கிறது. மண்ணெண்ணெய் விளக்கு தனக்கு ஏற்றபடி வெளிச்சத்தை கொடுக்கிறது. மின்சார விளக்கு அதற்குரிய வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது.
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களைப் பிரகாசிக்க செய்கிற கிறிஸ்துவை பிரதிபலித்து கர்த்தருக்காக வெளிச்சம் கொடுக்க வேண்டாமா?
நினைவிற்கு:- “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை” (யோவான் 1:4,5).