AppamAppam - Tamil

Oct 10 – துதிக்கும் தூதர்கள்!

“அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்” (சங். 148:2).

தூதர்கள் எப்போதும் கர்த்தரைத் துதிக்கிறார்கள். அவருடைய கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றுகிறார்கள். மட்டுமல்ல, அவ்வப்போது தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும் வந்து உதவி செய்கிறார்கள்.

ஒரு முறை ஜுலியா என்ற சகோதரி ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள ஸாம்பியா என்ற தேசத்திற்கு ஊழியத்தினிமித்தம் செல்ல வேண்டியதிருந்தது. அப்போது அந்த சகோதரிக்கு பத்தொன்பது வயது. புதிய தேசத்தில், நீக்ரோ மக்களின் கொடிய பழக்க வழக்கங்களின் மத்தியில் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தாங்க முடியாத வெயில் அவளுடைய சரீரத்தை வாட்டினது. ஊழியத்திற்கு போதுமான வசதிகள் எதுவும் அவள் தங்கியிருந்த வீட்டிலே செய்துதரப்படவில்லை. வீட்டு நினைவும், தனிமை உணர்ச்சியும் அவளை வாட்டி வதைத்தன.

ஒருநாள், இரவு அவள் படுக்கைக்கு செல்லுகிறதற்கு முன்பு உள்ளம் உடைந்தவளாய் கர்த்தரிடம் கண்ணீரோடு முறையிட்டு விட்டு அப்படியே தூங்கிவிட்டாள். நடு இரவில் திடீரென்று அவளுடைய அறை முழுவதும் பிரகாசத்தினால் நிறைந்திருந்திருந்தது. அவள் கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே ஒரு அழகான அருமையான தேவதூதன் பாசத்தோடு செட்டைகளை விரித்து தன்னைக் காத்துக் கொண்டு நிற்கிறதைக் கண்டாள்.

அந்த தூதனுடைய முகம் மிகவும் பிரகாசமானதாகவும், சொல்லி முடியாத அழகு நிறைந்ததாகவும் இருந்தது. அவன் வெளிச்சத்தை வஸ்திரமாக உடுத்தியிருப்பது போல் இருந்தது. அந்த தூதனுடைய தலை மயிர் சுருள் சுருளாகவும், வெண்மை நிறம் உடையதாகவும் இருந்தது. கண்கள் களங்கமில்லாத பாசத்தோடு விளங்கினது. அந்த தேவதூதன் நின்ற காட்சியை அவள் பார்த்ததும் ஒரு தெய்வீக சமாதானம் அவளுடைய இருதயத்தை நிரப்பிற்று.

உங்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டு உங்களுக்காக கர்த்தர் நியமித்திருக்கிற தேவதூதர்களையெல்லாம் காண்பது எத்தனை பாக்கியமான ஒரு காரியம்! தாய் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று சொன்ன ஆண்டவர், உங்களுக்காக தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். வேதத்தை வாசிக்கும்போது, கர்த்தருடைய தேவதூதர்கள் எத்தனையோ பரிசுத்தவான்களுக்கு பணிவிடை செய்யும்படி பூமியிலே இறங்கி வந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

ஆகார் ஒரு அடிமைப் பெண்தான். அவள் சாராளிடத்தில் கோபித்துக்கொண்டு தனியாக ஓடிவரும்போது கர்த்தருடைய மகிமையான தேவதூதன் அவளை சந்தித்தார். அவளோடுகூட முகமுகமாய் பேசி உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது எண்ணிமுடியாததாய் இருக்கும் என்று வாக்குப் பண்ணினார் (ஆதி.16:7-10).

தேவபிள்ளைகளே, உங்களுடைய துயர நேரங்களிலும், தேவைகளின் நேரங்களிலும் கர்த்தர் தம்முடைய தூதர்களை உங்களுக்காக அனுப்புகிறார். அவர்கள் கர்த்தருடைய செய்திகளை உங்களுக்கு துரிதமாய் கொண்டு வருகிறார்கள். தூர இடத்தில் இருந்து வருகிற நற்செய்தி ஆத்துமாவை குளிரப்பண்ணுகிறதுபோல, தேவதூதர்கள் கொண்டு வருகிற நற்செய்தி உங்களுடைய ஆத்துமாவையெல்லாம் குளிரப்பண்ணுகிறது.

நினைவிற்கு:- “கர்த்தர் என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்” (சகரி. 1:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.