AppamAppam - Tamil

Oct 9 – அலங்கரிக்கும் ஆவியானவர்!

“தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்” (யோபு 26:13).

கர்த்தர் தம்முடைய ஆவியினால் வானத்தை அலங்கரித்தார். பகலை சூரியனைக் கொண்டு அலங்கரித்தார். இரவை நட்சத்திரங்களால் அலங்கரித்தார். மாலை வேளையிலே அழகிய நீல நிறத்துடன் வானத்தை தோன்றச் செய்கிறது மாத்திரமல்ல, மேகங்களை அருமையான பஞ்சைப் போல மிதக்கச்செய்து அலங்கரித்திருக்கிறார். வானத்தின் அலங்கரிப்பை நோக்கிப் பாருங்கள்!

“உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத் திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது” (ஏசாயா 40:26). “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது” (சங். 147:4,5).

ஆவியானவர் வெறும் வானத்தை மாத்திரம்தான் அலங்கரித்தாரா? இல்லை. அவர் உங்களையும்கூட அலங்கரித்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது: “சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (சங்.149:4). நன்மையினாலும், கிருபையினாலும் முடி சூட்டி அலங்கரிப்பார். பரிசுத்தத்தினால் உங்களை அலங்கரிக்கிறார். பரிசுத்த அலங்காரத்துடனே நீங்கள் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்.

தேவபிள்ளைகளே, உங்கள் அலங்காரத்தைக் குறித்து யோசித்துப் பாருங்கள். சினிமாவில் நடிக்கும் நடிகைகள் புறம்பான அலங்காரத்தினால் பகட்டாய்த் தோன்றுகிறார்கள். ஆனால், உள்ளான மனுஷனில் உள்ள அலங்கரிப்பே உங்களுக்குத் தேவை. ஆவிக்குரிய அலங்கரிப்புதான் உங்களுக்குத் தேவை.

அப். பேதுரு எழுதுகிறார்: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்” (1 பேதுரு 3:3-5).

தேவன் உங்களில் எதிர்பார்க்கிற ஆவிக்குரிய அலங்காரத்தோடு கர்த்தரை நேசிப்பீர்களா? ஆத்தும மணவாளனாகிய இயேசு உங்கள் அலங்காரத்தைக் கண்டு மகிழட்டும். ஆவிக்குரிய அலங்காரத்தினால் நிரம்பிய ஏசாயா மகிழ்ச்சியோடுகூட சொல்லுகிறார், “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக் கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசா. 61:10). தேவபிள்ளைகளே, ஆவியானவர் உங்களை அலங்கரிக்கிற அலங்காரத்தில் மகிழ்ந்து களிகூருவீர்களாக.

நினைவிற்கு:- “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்” (ஏசா. 62:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.