AppamAppam - Tamil

Oct 7 – யூதா கோத்திரம்!

“…கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (2 நாளா. 20:3).

யூதாவெங்கும் உபவாசமும் துதியும் பெரிய எழுப்புதலையும், மீட்பையும் கொண்டு வந்தது. யூதா கோத்திரம் ஒரு விசேஷமான கோத்திரம். இஸ்ரவேலை அரசாண்ட மிகப்பெரிய ராஜாக்களெல்லாம் யூதா கோத்திரத்திலே வந்தவர்கள்தான். தாவீது, சாலொமோன் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். நம்முடைய அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்தான். அவர் “யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம்” என்று அழைக்கப்படுகிறார்.

யூதா என்றால் “கர்த்தரைத் துதிப்பேன்” என்பதுதான் அர்த்தம். யாக்கோபின் மூத்த மனைவியாகிய லேயாள், கர்த்தரைத் துதிக்கிற துதி கர்த்தரை பூமிக்குக்கொண்டு வந்து விடும் என்ற இரகசியத்தை அறிந்திருந்தாள். வேதம் சொல்லுகிறது, “…அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்” (ஆதி. 29:35).

யூதாவுக்கு முன்னாலே பிறந்தவன் லேவி. லேவி என்ற வார்த்தைக்கு “சேர்த்துக்கொள்ளுதல்” என்று அர்த்தம். லேவிக்கு அடுத்தபடியாக பிறந்தவன் யூதா. லேவியை அடுத்து யூதா வருகிறான். அதனுடைய அர்த்தம் என்ன? ஆண்டவரோடு ஆவி, ஆத்துமா, சரீரத்தை இணைத்து சேர்ந்துகொள்ளும்போது அதைத் தொடர்ந்து கர்த்தருடைய துதியாகிய யூதா பிறக்கும். சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தோடு ஒன்றாக இணைந்து முழு பெலத்தோடு கர்த்தரைத் துதிக்கும்போது, அங்கே யூத ராஜ சிங்கமாகிய இயேசு கடந்து வருவார். லேவி பிறக்காமல் யூதா பிறக்காது.

அநேகருடைய வாயிலே ஸ்தோத்திரம் இருப்பதில்லை. அதனால் வெற்றியும் கிடைப்பதில்லை. காரணம் என்ன? அங்கே லேவி பிறக்கவில்லை. ஆண்டவரோடு ஆவி, ஆத்துமா, சரீரம் இணையவில்லை. எல்லாக் கோத்திரத்தைப் பார்க்கிலும் யூதா கோத்திரம் பெரிய ஆசீர்வாதத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டது. அது என்ன பெரிய ஆசீர்வாதம்? ஆம், யூதா கோத்திரத்தில்தான் இரட்சகரான இயேசு கிறிஸ்து பிறந்தார். அவர் நமக்கு இரட்சகர். முழு உலகத்திற்கும் இரட்சகர்.

இரட்சகர் என்றால் விடுதலை அளிப்பவர் என்பது அர்த்தம். பாவ சாபங்களிலிருந்து விடுதலை அளிப்பவர். சத்துருவின் போராட்டங்களிலிருந்து விடுதலை அளிப்பவர். இந்த விடுதலை கர்த்தரைத் துதிக்கும் துதியாகிய யூதாவிலிருந்து உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் ஸ்தோத்திரம் செய்வதிலிருந்து உண்டாகுகிறது. உங்களுடைய பிள்ளைகள் செழித்து ஓங்கி வளர வேண்டுமா? அவர்களை கர்த்தரைத் துதிக்கும் துதிகளாகிய யூதாவாக்கி விடுங்கள். உங்களுடைய கணவனார் இரட்சிக்கப்பட அவரை யூதாவாக அர்ப்பணியுங்கள்.

யாக்கோபு தன் மகனாகிய யூதாவை ஆசீர்வதிக்கும்போது, “யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்து கொண்டு ஏறிப்போனாய்” (ஆதி. 49:8,9) என்று ஆசீர்வதித்தார். குடும்பமே யூதாவாய் மாறிவிட்டால் அங்கே யூதா கோத்திரத்தின் இயேசு கிறிஸ்து வல்லமையாய் இறங்கி வருவார். தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் துதியை அதிகப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்து கொண்டார்” (சங். 78:68).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.