AppamAppam - Tamil

Oct 6 – அரசரை திரும்ப அழைத்து வாருங்கள்!

“இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன்?…” (2 சாமு. 19:10).

தாவீது ராஜாவை சீக்கிரமாய் அழைத்துக்கொண்டு வரும்படி அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் ஆள் அனுப்பினார்கள். அனுப்பப்பட்ட இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் மூப்பர்களோடுகூட பேசினார்கள். “ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப் போவானேன்? நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்” (2 சாமு. 19:11,12).

“இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப் பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள். ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார் ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால்மட்டும் வந்தார்கள்” (2 சாமு. 19:14,15). தாவீது ராஜா மீண்டும் எருசலேமுக்கு புதிய வல்லமையோடு, புதிய கிருபையோடு திரும்பி வந்தார். ஜனங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

இப்போதும் நீங்கள் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகிய இயேசுகிறிஸ்துவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் மீண்டும் பூமிக்கு வரப்போகிறார். பூமியில் ஆயிரம் வருஷம் நீதியோடும், சமாதானத்தோடும் அரசாட்சி செய்வார். ராஜாவை மகிழ்ச்சியோடு நீங்கள் வரவேற்பீர்களா? வேத புத்தகத்தின் கடைசி பகுதி “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று கர்த்தரை அழைக்கிறது (வெளி. 22:20).

சாலொமோனின் உன்னதப்பாட்டு புத்தகத்தில் கடைசி வசனம் “என் நேசரே! தீவிரியும்” என்று முடிவடைகிறது (உன். 8:14). ஆம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையே உங்களுடைய முக்கியமான நம்பிக்கையாய் இருக்கிறது. வேதம் சொல்லுகிறது, “…தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்” (எபி. 9:28).

“அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” (மத். 24:30).

சாதாரணமாக ஒரு குடும்பத்திலுள்ள தகப்பனார் வெளியூர் சென்று ஒரு ஆண்டு கழித்து திரும்ப வருகிறார் என்றால் பிள்ளைகள் தகப்பனாரின் வரவிற்காக எவ்வளவு ஆயத்தத்தோடு இருப்பார்கள்! நாட்களை எண்ணிக் கொண்டேயிருந்திருப்பார்கள். அப்பா சீக்கிரமாய் வருவார் என்று சொல்லி குதித்து மகிழுவார்கள். முகத்தைக் கழுவி, புதிய துணியை உடுத்தி, சிரித்த முகத்தோடுகூட தகப்பனாருக்காக காத்திருப்பார்கள் அல்லவா!

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆயத்தமாகி கிறிஸ்துவினுடைய வருகைக்கு காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

நினைவிற்கு:- “மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்” (மத். 16:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.