AppamAppam - Tamil

Oct -5 – தாவீதின் குமாரன்!

“அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்” (2 சாமு.14:28).

அப்சலோம் தாவீதின் குமாரன். அவன் “தேவனுடைய நகரம்” என்று அழைக்கப்படுகிற எருசலேமில் குடியிருந்தான். வேதம் சொல்லுகிறது ‘அப்சலோமோ ராஜாவின் முகத்தை இரண்டு வருஷகாலமாய் காணவேயில்லை’. சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவேளை எருசலேமாகிய சபைக்குள் நீங்கள் குடியிருந்திருக்கலாம். தேவனுடைய பிள்ளை என்றும், கிறிஸ்தவன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன்: ‘நீங்கள் ராஜாதி ராஜாவின் முகத்தை தரிசித்து எத்தனை நாட்கள் ஆயிற்று? தேவபிள்ளைகளின் மேன்மை, கர்த்தருடைய முகத்தைத் தரிசிப்பதுதான் என்பதை மறந்து போனீர்களோ?’

எல்லா மிருக ஜீவன்களும்கூட கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பார்க்கின்றன. காட்டு மிருகங்கள் ஆகாரத்திற்காக அவருடைய முகத்தை தேடுகின்றன. சங்கீதக்காரன் சொல்கிறார்: “ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்” (சங். 104:27-29).

 தாவீதின் குமாரனாகிய அப்சலோம் ராஜாவின் முகம் காணமுடியாமல் மறைந்திருந்ததின் காரணம் என்ன? பாவமும் கசப்பான வேரும்தான். அவன் தன் சகோதரியாகிய தாமார் நிமித்தமாக அம்னோனைக் கொலை செய்தான். அதைத் தொடர்ந்து அப்சலோம் ராஜாவின் முகத்தைத் தரிசிக்க முடியாமல் தவித்தான். “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா. 59:2).

அப்சலோம் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுகிறான். அதே நேரத்தில் கிறிஸ்துவும் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுகிறார். இரண்டுபேருக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! கிறிஸ்துவின் முகம் எப்பொழுதும் தன் பிதாவையே நோக்கிக் கொண்டிருந்தது. பன்னிரெண்டு வயதிலேயே தம்முடைய பிதாவின் முகம் பார்த்து தன் பிதாவுக்கு அடுத்த காரியங்களில் தான் இருக்க வேண்டுமென்பதை உறுதி செய்துகொண்டார்.

பிதாவின் முகம் ஒரே ஒரு நேரம் குமாரனுக்கு மறைக்கப்பட்டது. அது சிலுவையிலே நம்முடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் அவர் சுமந்தபோது. தீமையைக் காணாத சுத்தக்கண்ணனாகிய பிதா, மனுக்குலத்தின் பாவபாரம் தன் குமாரன்மேல் இறங்கினபோது, இமைப்பொழுது தம் முகத்தை மறைத்தார். கிறிஸ்துவால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. “என் பிதாவே, என் பிதாவே, ஏன் என்னை கைவிட்டீர்?” என்று கதறினார்.

தேவபிள்ளைகளே, தேவனுடைய முகம் உங்களுக்கு சற்றே மறைந்திருந்தாலும் உடனே கதறி அழுது, ஆதி அன்புக்கு திரும்பிவிடுங்கள். ஆதி ஜெப ஜீவியத்திற்கு திரும்பிவிடுங்கள். ஆதியிலே நீங்கள் தேவனோடு கொண்டிருந்த அன்பின் ஐக்கியத்திற்கு திரும்பி விடுங்கள்.

நினைவிற்கு:- “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று” (சங். 27:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

அன்பு தேவபிள்ளைகளே,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அடுத்த வாரம், மே 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பரிசுத்த ஆசீர்வாத உபவாச ஜெபம் நம்முடைய ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயத்தில் ஒழுங்கு செய்து இருக்கின்றோம். அதில் அடியேனும் என்னோடுகூட தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் கர்த்தருடைய வார்த்தையை கொண்டுவர இருக்கின்றோம். நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு இந்த பரிசுத்த ஆசீர்வாத உபவாச ஜெபத்திலே கலந்துக்கொண்டு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம் No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு, கோடம்பாக்கம்.

For Contact-
+919003067777,   +919884908777,   +919884916777