AppamAppam - Tamil

Oct – 4 – மேன்மைப்படுத்துவேன்!

“நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்…” (உபா. 26:19).

 உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன். ஒருவனை புழுதியிலிருந்து உயர்த்தி ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறவர் இன்று உங்களுடைய அருகிலே வந்து, ‘நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்’ என்று வாக்கு கொடுக்கிறார்.

கர்த்தர் மனுஷனுக்குக் கொடுக்கிற ஆசீர்வாதங்களில் ஒன்று புகழ்ச்சியாகும். தம்முடைய பிள்ளைகளுக்கு அதைக் கொடுப்பதில் அவர் சந்தோஷமடைகிறார். கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, அவருக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். அதில் மிக முக்கியமான ஒன்று,”உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்” என்பதாகும் (ஆதி. 12:2).

இன்றைக்கு ஆபிரகாமை இஸ்ரவேலர் தங்களுக்குத் தகப்பனாக அழைக்கிறார்கள்; நீங்களும்கூட ஆபிரகாமை விசுவாசிகளின் தகப்பனாக அழைக்கிறீர்கள். கர்த்தர் அவ்வளவாக ஆபிரகாமை மேன்மைப்படுத்தியிருக்கிறார்.

மேலும், கர்த்தர் தன்னை “ஆபிரகாமின் தேவன்” என்று அழைக்க வெட்கப்படவில்லை. தன்னுடைய பேரை ஆபிரகாமோடும், ஆபிரகாமுடைய பிள்ளைகளோடும் இணைத்துக்கொண்டு: ‘நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்’ என்று சொல்லுகிறார். இது ஆபிரகாமுக்கு எவ்வளவு பெரிய பெருமை!

மத்தேயு முதலாம் அதிகாரத்தில், ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆம், தன்னை அவர் ஆபிரகாமின் குமாரன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமையடைந்தார். இன்றைக்கு ஆபிரகாமுக்கு வேதப்புத்தகத்திலும், சரித்திரத்திலும், முழு உலகத்திலும் நீங்காத மேன்மை கிடைத்திருக்கிறது. அந்த தேவன் இன்றைக்கு உங்களைப் பார்த்து, ‘உன்னை நான் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் சிறந்திருக்கும்படி செய்வேன்’ என்று சொல்லுகிறார்.

யோசேப்பைப் பாருங்கள்! அவனுடைய சகோதரர்கள் அவனை எவ்வளவோ ஒடுக்க நினைத்தார்கள். அவனுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டு குழியிலே தூக்கிப் போட்டார்கள். எகிப்திற்குச் செல்கிற வியாபாரிகளிடம் அவனை விற்றார்கள். சாத்தான் அவனுடைய பெயரைக் கெடுக்கும்படி போத்திபார் மனைவியின் மூலம் கிரியை செய்தான். அபாண்டமான பழிகளை சுமக்க வேண்டியதாயிற்று. சிறையிலே போடப்பட்டு கைதியாக கண்ணீரோடு காலம் கடத்தினான்.

ஆனால் அதோடு அவனுடைய வாழ்க்கை நின்றுவிடவில்லை. கர்த்தர் அவனை உயர்த்துகிற நேரம் வந்தது. எகிப்திலுள்ள எல்லாரைப் பார்க்கிலும் அவன் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் சிறந்திருக்கும்படி கர்த்தர் அவனை உயர்த்தினார். எகிப்திலே பார்வோனுக்கு அடுத்தபடியாக அவன் உயர்ந்து விளங்கினான். ஆம், நம்முடைய தேவனாகிய கர்த்தர்தான் ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்.

தேவபிள்ளைகளே, அந்த தேவன் நிச்சயமாகவே உங்களையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “…நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” (யோவான் 12:26).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.