AppamAppam - Tamil

Oct 03 – உன்னைச் சந்திப்பேன்!

“அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்” (யாத். 25:22).

 ஒரு சிறுவன் வானமும் பூமியும் சந்திப்பதாக எண்ணி, சந்திக்கும் இடத்தை பார்க்க விரும்பினான். அந்த இடம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். மிக தூரமான ஒரு இடத்தில் வானம் அப்படியே தாழ்ந்து பூமியை தொடுகிறதாக எண்ணி அதை நோக்கி நடந்தான். நடக்க நடக்க முடிவில்லாமல் நடக்க வேண்டியதாயிற்று. தினமும் கொஞ்சதூரம் நடப்பான். பின்பு வீட்டுக்கு திரும்பிவிடுவான். இப்படி அவன் பல திசைகளிலும் முயற்சித்துக்கொண்டேயிருந்தான்.

ஒரு நாள் அவன் தனது போதகரை அணுகி, இது குறித்து விளக்கம் கேட்டான். அந்த போதகர், அந்த சிறுவனிடம் எப்படி பேசுவது, எப்படி அவனுக்கு விளக்கிச் சொல்வது என்று அறியாமல் கடைசியில் ஒரு சிலுவையை வரைந்தார். அதில் நேர்கோடு வானத்தை குறிக்கிறது. குறுக்குக்கோடு பூமியைக் குறிக்கிறது. இரண்டும் சந்திக்கும் இடம்தான் இயேசு சிலுவையிலே தன் ஜீவனை கொடுத்த இடம் என்றார். சிறுவனுக்கு அதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் காலங்கள் கடந்தது. அவனுடைய அறிவு பெருகியது. கர்த்தர் அவன் மனக்கண்களைத் திறந்தார். வானாதி வானங்களை உண்டுபண்ணின வானவராகிய இயேசுகிறிஸ்து மனுக்குலத்தை சந்திக்க, மனுக்குலத்தை மீட்டுக்கொள்ள சிலுவையிலே தன்னை தியாகமாய் கொடுத்ததை அறிந்துகொண்டான். ஆம், வானமும் பூமியும் கிறிஸ்துவிலேதான் சந்தித்துக் கொள்ளுகிறது.

பழைய ஏற்பாட்டிலே தேவன் மனுஷனை சந்திக்கிற இடமாக ஆசரிப்பு கூடாரத்திலுள்ள பரிசுத்த ஸ்தலம் விளங்கியது. மோசேயிடம் கர்த்தர் பேசும்போது, “அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின் மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப்போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்” என்றார் (யாத். 25:22).

இன்று கிருபாசனமாக கல்வாரி சிலுவையே விளங்குகிறது. அதுதான் வானத்திற்கு வழியை திறக்கிறது. கிறிஸ்துவை சிலுவையில் சந்திக்காமல் எந்த மனுஷனாலும் பரலோகத்திற்கு செல்லவே முடியாது. கிறிஸ்துவின் இரத்தத்தால் நீங்கள் பாவங்களற கழுவப்பட்டாலொழிய வேறு விதத்தில் பாவ மன்னிப்பைப் பெற்று பரிசுத்தமுள்ள தேவனை கிட்டிச் சேரவே முடியாது.

வானத்தை பூமி தொடும் இடத்தை நோக்கி நடந்த சிறுவனைப்போலவே சாது சுந்தர்சிங் சமாதானத்தை தேடி, மெய்யான கடவுளைத் தேடி நடந்தார். குகைகளிலே வாழ்ந்த துறவிகளை சந்தித்தார். ஆனால் அவருடைய உள்ளமோ திருப்தி அடையாமல் தேடிக்கொண்டேயிருந்தது. முடிவில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை தரிசித்தபோதோ கிறிஸ்துவிலே வானமும் பூமியும் ஒன்றாய் இணைக்கப்படுகிறதை கண்டு அகமகிழ்ந்தார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் மெய்தேவனை சந்திக்க விரும்பினால் சிலுவையண்டை வாருங்கள். சிலுவையில் சந்தித்த அன்பின் தேவனை உங்கள் வாழ்நாளெல்லாம் போற்றித் துதித்து மகிழுங்கள். இந்த நாட்கள் கிறிஸ்துவுக்காக வாழுகிற நாட்களாய் இருக்கட்டும். கிறிஸ்துவினுடைய வல்லமையையும் மகத்துவத்தையும் நீங்கள் வெளிப்படுத்துகிற நாட்களாய் இருக்கட்டும்.

நினைவிற்கு:- “…நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்” (சங். 106:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.