AppamAppam - Tamil

Oct-1 – சுவாசம்!

“…ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதி. 2:7).

 தேவன் ஊதிய சுவாசம் மனுஷனுக்குள்ளே சுவாசத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்ல, அவனுக்குள் ஜீவனைக் கொண்டு வந்தது. அவன் ஆவியும் ஜீவாத்துமாவும் உடையவனானான். நீங்கள் எப்பொழுதாகிலும் உங்களுடைய சுவாசத்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது எத்தனை ஆச்சரியமான கர்த்தருடைய செயல் என்பதை தியானித்திருக்கிறீர்களா?

சாதாரணமாக ஒரு மனுஷன் ஒருமணி நேரத்திற்கு 1050 முறை சுவாசிக்கிறான் என்று ஒரு புத்தகத்தில் வாசித்தேன். ஒரே நாளில் 25,000 தடவைக்கு மேலாக அவன் சுவாசித்து விடுகிறான். 42 வயதிற்குள் சுமார் நாலாயிரம் இலட்சம் தடவை அவன் காற்றை உட்கொண்டு வெளியேற்றுகிறான். இரவும் பகலும் அந்த இயந்திரம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

நீங்கள் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், நீங்கள் நின்றாலும் தூங்கினாலும், அந்த சுவாசம் நிற்காமல் இயங்கிக்கொண்டேயிருக்கிறது. அது தானாகவே இயங்குகிறது. உங்களுடைய எந்த சுயமுயற்சியுமின்றி, இயற்கையாகவே இரவும் பகலும் இயங்கும்படி, கர்த்தர் அதை அமைத்திருக்கிறார். நம் கர்த்தர் எத்தனை ஆச்சரியமானவர்! ஆம், அவர் எல்லாருக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறவர் (அப்.17:25).

சுவாசத்தை இடைவிடாமல் செய்கிற அந்த நுரையீரலை நோக்கிப் பாருங்கள். அது இரத்தத்திலிருந்து கரியமில வாயுவை அகற்றி, பிராண வாயுவைக் கொண்டு வருகிறது. பிராண வாயு நம்முடைய ஜீவனுக்கு எவ்வளவு முக்கியமானது! ஒரு மனுஷனுக்கு தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு பிராணவாயு கிடைக்காமற்போனால், அவன் மரித்துவிடுவானே. ஆம், இந்த மூச்சு அவருடைய கைகளில்தான் இருக்கிறது. நீங்கள் தினமும் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்துக்காகவும் தேவனை நன்றியோடு துதிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

ஒரு முறை ஒரு வயதான மூதாட்டி மரணப்படுக்கையில் இருந்தார். அவருடைய மரண நேரம் சமீபித்துவிட்டது என்று அறிந்த போதகர் அவரைப் பார்த்து, வேதத்தில் உள்ள எந்தப் பகுதியை வாசிக்க வேண்டும் என்று கேட்டார். அந்த மூதாட்டி அதற்கு கணீர் என்ற குரலில் சங். 150:6-ஐ வாசியுங்கள் என்று சொன்னார்கள். அந்த வசனம் “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” என்பதாகும். ஆம், அந்த மூதாட்டியின் பிறப்பின் நாளிலிருந்து கடைசி மூச்சு இருக்கிற வரையிலும் காத்த கர்த்தரைத் துதியாமல் நித்தியத்திற்குள் செல்வது எப்படி?

நித்தியம் என்பது சுவாசம் நிற்பதன் ஆரம்பமாயிருக்கிறது. உள்ளே இழுக்கும் மூச்சு மீண்டும் வெளியே வராமல் போகும்போது, மனுஷன் நித்தியத்திற்குள் பிரவேசித்து விடுகிறான். மனுஷன் எவ்வளவு பெரியவனாய் இருந்தாலும், அவனுடைய நாசியிலுள்ள சுவாசம் போய்விட்டால் அவன் ஒன்றுமில்லை. ஆகவேதான், வேதம் சொல்லுகிறது, “நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்” (ஏசாயா 2:22).

தேவபிள்ளைகளே, உங்கள் நாசியிலுள்ள ஒவ்வொரு சுவாசமும் கர்த்தருடைய ஈவு என்பதை அறிந்து கர்த்தரைத் துதிப்பீர்களாக. அவரில் மாத்திரம் உங்கள் நம்பிக்கையை வைப்பீர்களாக.

நினைவிற்கு:- “என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை” (யோபு 27:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.